ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் டர்க்சன் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் டர்க்சன் 

உலக மீன்பிடித்தொழில் நாளுக்கு கர்தினால் டர்க்சன் செய்தி

உலகெங்கும் 320 கோடி மக்களுக்கு உணவளிக்கும் மீன்பிடித்தொழில் துறையில், கட்டாயத் தொழில், மனித விற்பனை ஆகிய கொடுமைகள் நிகழ்கின்றன - கர்தினால் பீட்டர் டர்க்சன்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பகுதி நேரமாகவும், சிறிய அளவிலும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களில், 85 விழுக்காட்டினர் ஆசியர்கள் என்றும், இவர்களில் 14 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் விடுத்துள்ள ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 21, இப்புதனன்று சிறப்பிக்கப்படும் உலக மீன்பிடித்தொழில் நாளன்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், 1997ம் ஆண்டு, நவம்பர் 21ம் தேதி, இந்த உலக நாள், புது டில்லியில் முதல் முறை சிறப்பிக்கப்பட்டதை நினைவுகூர்ந்துள்ளார்.

2016ம் ஆண்டு திரட்டப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின் படி, உலகில் சிறிய அளவில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 96 இலட்சம் என்றும், அவர்கள் முயற்சியால், 17 கோடியே 10 இலட்சம் டன் எடையுள்ள மீன்கள் உலக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு, அதன் பயனாக, 32,000 கோடி அமெரிக்க டாலர்கள் ஈட்டப்படுகின்றன என்றும், கர்தினால் டர்க்சன் அவர்களின் செய்தி கூறுகிறது.

உலகெங்கும் 320 கோடி மக்களுக்கு உணவளிக்கும் இந்த மீன்பிடித்தொழில் துறையில், கட்டாயத் தொழில், மனித விற்பனை ஆகிய கொடுமைகள் நிகழ்கின்றன என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் குறித்த உலகளாவிய அறிக்கை வெளியிடப்பட்ட 70ம் ஆண்டு நிறைவு நடைபெறும் இவ்வாண்டில், கடல் சார்ந்த வாழ்க்கை நடத்தும் பல கோடி மக்களின் அடிப்படை உரிமைகள் பலவாறாக பறிக்கப்பட்டுள்ளன என்பதை கர்தினால் டர்க்சன் அவர்களின் செய்தி குறிப்பிட்டுள்ளது.

பொருளாதாரத்தையும், இலாபத்தையும் முன்னிறுத்தி நடத்தப்படும் தொழில்கள், வர்த்தகம் அனைத்திலும், அத்தொழில்களை ஆற்றும் மனிதர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மறக்கப்பட்டு வருகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய கருத்தை, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.

மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள், கடல் வளங்களை அழித்தல், தங்கள் நாட்டு எல்லைகளைத் தாண்டி மீன்பிடித்தல், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்தல் போன்ற பல குற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளனர் என்பதை, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2018, 15:36