தேடுதல்

Vatican News
புனித பூமியில் பணியாற்றுவோருடன் புனித பூமியில் பணியாற்றுவோருடன்  

கர்தினால் சாந்த்ரி - புனித பூமி பயண நிகழ்வுகள்

இஸ்ரேல் மட்டும் பாலஸ்தீனா நாடுகளுக்கிடையே நிலவும் உறவு குறித்தும், அதன் விளைவாக, புனித பூமியில் வாழும் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கீழை வழிபாட்டு முறை திருஅவைகள் பேராயத்தின் தலைவர், கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள், நவம்பர் 26 இத்திங்கள் முதல், 28 இப்புதன் முடிய புனித பூமியில் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தில், நவம்பர் 27, இச்செவ்வாயன்று இயேசுவின் இறுதி உணவு அறையில் நிறைவேற்றிய திருப்பலி, ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

எருசலேம் நகரின் அப்போஸ்தலிக்க பிரதிநிதி, பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி, இலத்தீன் மறைமாவட்ட பேராயர், பியர்பத்திஸ்தா பிஸ்ஸபல்லா, மெல்கித்திய முதுபெரும்தந்தையின் எருசலேம் பிரதிநிதியான ஜியாசிந்தோ புலோஸ் மார்குஸ்ஸோ ஆகியோர் உட்பட, பல ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர்.

திருப்பலிக்குப்பின், இஸ்ரேல், மற்றும், பாலஸ்தீனா நாடுகளுக்கிடையே நிலவும் உறவு குறித்தும், அதன் விளைவாக, புனித பூமியில் வாழும் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

புனித பூமியில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோர் குறித்து திருப்பீடம் கூடுதல் அக்கறை கொண்டுள்ளது என்பதையும், புலம்பெயர்ந்தோர் மட்டில் திருத்தந்தை எப்போதும் காட்டிவரும் அக்கறையைக் குறித்தும் கர்தினால் சாந்த்ரி அவர்கள் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

செவ்வாய் பிற்பகலில், எருசலேமில் உள்ள நோத்ரு தாம் அரங்கத்தில், இலத்தீன் வழிபாட்டு முறையில், அருள்பணி பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கர்தினால் சாந்த்ரி அவர்கள் சந்தித்த வேளையில், புனித பூமியில், குருமாணவர்கள் ஆற்றக்கூடிய சிறப்பான பணிகள் குறித்து பேசினார்.

செவ்வாய் மாலை நடைபெற்ற ஓர் உயர்மட்டக் கூட்டத்தில், இஸ்ரேல், பாலஸ்தீனா, ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகளை தொடர்ந்து பராமரிக்கும் பணிகள் குறித்து, கர்தினால் சாந்த்ரி அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

28 November 2018, 14:49