கானடாவில் CANNABIS போதைப்பொருள் கானடாவில் CANNABIS போதைப்பொருள் 

போதைப்பொருள் தடுப்பு குறித்த வத்திக்கான் கருத்தரங்கு

போதைப்பொருள்கள் மற்றும் அவற்றுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பது குறித்த ஒரு பன்னாட்டு கருத்தரங்கு வத்திக்கானில் தொடங்கவுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

போதைப்பொருள்கள் மற்றும் அவற்றுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பது குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்றை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் திருப்பீட அவை, இவ்வாரத்தில் நடத்தவுள்ளது.

நவம்பர் 29, வருகிற வியாழன் முதல், டிசம்பர் 1, சனிக்கிழமை முடிய, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில், பல்வேறு விதமான போதைகளுக்கு அடிமையானவர்கள் பற்றியும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது பற்றியும், போதைப்பொருள்கள் பயன்பாட்டைத் தடுப்பது குறித்த யுக்திகள் பற்றியும் ஆராயப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

போதைப்பொருள்கள், சூதாட்டம், இணையதளம், பாலியல் இன்பத்தைத் தூண்டும் ஓவியங்கள், இலக்கியங்கள், காணொளிகள்  போன்றவற்றுக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது மற்றும், அவற்றைத் தடுப்பது குறித்த வழிகளை, இக்கருத்தரங்கு ஆராயும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில நாடுகள், அண்மையில், கஞ்சா பயன்படுத்தப்படுவதை சட்டப்படி அங்கீகரித்துள்ளவேளை, இந்நடவடிக்கை  காலப்போக்கில் பிரச்சனைகளை அதிகரிக்கும் என்று, இக்கருத்தரங்கை நடத்துவோர் எச்சரித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், இத்தாலிய நலவாழ்வு அமைச்சர் ஜூலியோ கிரில்லோ போன்றோர், இக்கருத்தரங்கில் உரையாற்றுவார்கள். இன்னும், போதைப்பொருள் தடுப்புக்காகச் செயல்படும் உலக கூட்டமைப்பு, ஐ.நா. அமைப்பு, இத்தாலிய காவல்துறை போன்றவற்றின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2018, 15:01