செர்னோபில் அணு உலை விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினர் செர்னோபில் அணு உலை விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினர் 

அணு உலைகளில் ஏற்பட்ட விபத்துக்கள் நமக்கு எச்சரிக்கைகள்

ஹிரோஷிமா, நாகசாகி, செர்னோபில், ஃபுகுஷிமா தவறுகள், இனியும் உலகில் நிகழாதவண்ணம் விழிப்பாயிருக்க வேண்டும் - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உக்ரைனில் உள்ள செர்னோபில் (Chernobyl), மற்றும் ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா (Fukushima) அணு உலைகளில் ஏற்பட்ட விபத்துக்கள், அணு சக்தியைக் குறித்த எச்சரிக்கைகளாக நமக்கு அமைந்தன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள்,  'அணு கதிரியக்கத்தின் விளைவுகள்' என்ற தலைப்பில், ஐ.நா.வின் அறிவியல் கழகம் (UNSCEAR) நவம்பர் 6ம் தேதி ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில், இவ்விரு விபத்துக்கள் குறித்து தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் நிகழ்ந்த அணு ஆயுதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள், பல ஆண்டுகள், அணு கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட வரலாற்றை அறிந்துள்ள நாம், இத்தகையத் தவறுகள் இனியும் உலகில் நிகழாதவண்ணம் விழிப்பாயிருக்க வேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள், வேண்டுகோள் விடுத்தார்.

ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட அணு கதிரியக்கத்தின் முழுமையான ஓர் அறிக்கையை இவ்வுலகம் அறிந்துகொண்டால், இனிவரும் காலத்தில் நாம் தகுந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற உதவியாக இருக்கும் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஐ.நா.வின் அறிவியல் கழகம் (UNSCEAR) கடந்த 65 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளை திருப்பீடம் பாராட்டுகிறது என்ற கூற்றோடு பேராயர் அவுசா அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2018, 15:41