தேடுதல்

லூர்து நகர் திருப்பலியில், 'புனிதக் கல்லறையின் காவலர்கள்'  அமைப்பினர் லூர்து நகர் திருப்பலியில், 'புனிதக் கல்லறையின் காவலர்கள்' அமைப்பினர் 

புனித பூமி கண்காட்சியாக மாறிவிடக்கூடாது

புனிதக் கல்லறையின் காவலர்கள் அமைப்பும், எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை தலைமையகமும் இணைந்து, 90,000த்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி வழங்குகின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித பூமி, பார்வையாளர்களைக் கவரும் கண்காட்சியாக மாறிவிடக்கூடாது என்பதில், திருப்பீடம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று, புனிதக் கல்லறையின் காவலர்கள் என்ற அமைப்பின் தலைவரான கர்தினால் Edwin O’Brien அவர்கள் நவம்பர் 7, இப்புதனன்று, செய்தியாளர்களிடம் கூறினார்.

புனிதக் கல்லறையின் காவலர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், வரும் வாரத்தில் வத்திக்கானில் நடத்தவிருக்கும் பன்னாட்டு கூட்டத்தைக் குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய கர்தினால் O’Brien அவர்கள், புனித பூமியில் கத்தோலிக்கத் திருஅவை மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

புனித பூமியில் வாழும் கத்தோலிக்கர்களும், கிறிஸ்தவர்களும், அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டால், அந்நாடு ஒரு கண்காட்சியாக மாறிவிடும் என்பதை எடுத்துரைத்த கர்தினால் O’Brien அவர்கள், இந்த வெளியேற்றத்தைத் தடுக்கும் நோக்கத்தில், அந்நாட்டில் கல்வி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறினார்.

புனிதக் கல்லறையின் காவலர்கள் அமைப்பும், எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை தலைமையகமும் இணைந்து, 68 பங்குத்தளங்களில், 40 பள்ளிகளை நடத்தி வருகின்றன என்றும், இவற்றில், ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ்ரேல், சைப்ரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 90,000த்திற்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர் என்றும், கர்தினால் O’Brien அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட, கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள், புனித பூமியில், கத்தோலிக்க திருஅவைக்கும், கீழை வழிபாட்டு முறை சபைகளுக்கும் இடையே நிலவும் கூட்டுறவு முயற்சிகள் குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு விவரங்களை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2018, 15:01