தேடுதல்

கொரிய நாடுகளை இணைக்கும் சாலை அமைக்கும் பணி கொரிய நாடுகளை இணைக்கும் சாலை அமைக்கும் பணி 

நிலத்தடி கண்ணி வெடிகளை அகற்றுதல் குறித்து திருப்பீடம்

வட மற்றும் தென் கொரிய நாடுகள் இணைந்து, அவ்விரு நாடுகளுக்கிடையே புதைக்கப்பட்டுள்ள நிலத்தடி கண்ணி வெடிகளை அகற்றி வரும் முயற்சிகள், உலகின் பல நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதர்கள் அடையும் துன்பங்களை மையப்படுத்தி சிந்தித்ததன் பயனாக, நிலத்தடி கண்ணி வெடிகளை அகற்றும் முயற்சிகள் உலகின் பல நாடுகளில் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யூர்க்கோவிச் அவர்கள், நிலத்தடி கண்ணி வெடிகளை அகற்றும் அமைப்பு, நவம்பர் 29, இவ்வியாழனன்று ஜெனீவாவில் நடத்திய ஒரு கூட்டத்தில், உரையாற்றுகையில், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அரசுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.

வட மற்றும் தென் கொரிய நாடுகள் இணைந்து, இவ்விரு நாடுகளுக்கிடையே புதைக்கப்பட்டுள்ள நிலத்தடி கண்ணி வெடிகளை அகற்றி வரும் முயற்சிகள், உலகின் பல நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன என்று, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் எடுத்துரைத்தார்.

கண்ணி வெடிகளை அகற்றுவதில் அரசுகள் காட்டும் அதே தீவிரம், இந்த வெடிகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்வதிலும் காட்டப்படவேண்டும் என்று பேராயர் யூக்கோவிச் அவர்கள் தன் உரையில் வேண்டுகோள் விடுத்தார்.

கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டோரில் பலர் குழந்தைகள் என்ற உண்மை, இந்தக் கொடுமையை மேற்கொண்ட அரசுகளின் மதியற்ற செயல்களை உலகிற்கு புரிய வைத்துள்ளது என்பதையும் பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2018, 15:23