பேராயர் ஈவான் யுர்க்கோவிச் பேராயர் ஈவான் யுர்க்கோவிச் 

வளரும் நாடுகளின் மிகப்பெரும் சவால், கடன் பிரச்சனைகள்

2017ம் ஆண்டு, வளரும் நாடுகளின் கடன் தொகை 7 இலட்சத்து 64,000 கோடி அமெரிக்க டாலர்கள் என்ற நிலையை அடைந்துள்ளது - பேராயர் யுர்க்கோவிச்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல வளரும் நாடுகள், அண்மையக் காலங்களில் சந்தித்துவரும் மிகப்பெரும் சவால், பிற நாடுகளுக்கு அவர்கள் வழங்கவேண்டிய கடன் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.அவை கூட்டமொன்றில் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றுவரும் பேராயர் ஈவான் யுர்க்கோவிச் அவர்கள், 'முன்னேற்றம் நோக்கி பொருளாதாரம்' என்ற தலைப்பில், நவம்பர் 7, இப்புதனன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

வளரும் நாடுகள், அயல் நாடுகளுக்கு செலுத்தவேண்டிய கடன், அண்மையக் காலங்களில் 8.5 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும், 2017ம் ஆண்டு, இந்தக் கடன் தொகை, 7 இலட்சத்து 64,000 கோடி அமெரிக்க டாலர்கள் என்ற நிலையை அடைந்துள்ளது என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

வறுமைப்பட்ட நாடுகள் அடைந்துள்ள இந்தக் கடன் தொகைக்கு வட்டி செலுத்துவதற்கே அந்நாடுகளின் பெரும்பான்மையான நிதி ஒதுக்கப்படுவதால், நாட்டில் வேறு எந்த முன்னேற்றத் திட்டத்தையும் அவர்களால் மேற்கொள்ள இயலாமல் போகிறது என்று பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கவலை வெளியிட்டார்.

மக்களின் நலனை மனதில் கொள்ளாமல், வர்த்தக வரவுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவதால், பொருளாதாரம், நன்னெறியற்ற முறையில் பயன்படுத்தப்படுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்தை, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் மேற்கோளாகக் காட்டி பேசினார்.

செல்வம் மிக்க நாடுகள், தங்கள் நிதி நிலைமை மற்றும், நிதி பரிமாற்றம் ஆகியவற்றில் வெளிப்படையான வழிமுறைகளைப் பின்பற்றாமல் போகும் வேளையில், வறுமைப்பட்ட நாடுகளின் கடன் பிரச்சனைகள் மேலும் ஆழப்படுகின்றன என்று, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2018, 14:55