தேடுதல்

கர்தினால் பீட்டர் டர்க்சன் கர்தினால் பீட்டர் டர்க்சன் 

ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் பட்டயப் படிப்பு

'இறைவா உமக்கே புகழ்' திருமடலில் கூறப்பட்டுள்ள எண்ணங்கள், மக்கள் மத்தியில் இன்னும் பரவலாகச் சென்றடைவதற்கு தடையாக, அருள்பணியாளர்களும், ஆயர்களும் உள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழலை மையப்படுத்தி வெளியிட்ட 'இறைவா உமக்கே புகழ்' திருமடல், மக்கள் மத்தியில் இன்னும் பரவலாகச் சென்றடைவதற்கு தடையாக அருள்பணியாளர்களும், ஆயர்களும் உள்ளனர் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கூட்டத்தில் கூறினார்.

உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகமும், இன்னும் பல பாப்பிறைப் பல்கலைக் கழகங்களும் இணைந்து, ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் என்ற தலைப்பில் நடத்திய வகுப்புகள் நிறைவடைந்ததையடுத்து, அம்மாணவர்களுக்கு பட்டயம் வழங்கும் விழாவில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது அவசியம் என்ற பொறுப்புணர்வை மக்கள் மத்தியில் வளர்க்க, 'இறைவா உமக்கே புகழ்' திருமடல் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்தும், அக்கருத்து மக்களைச் சென்றடையாமல் தடையாக இருப்பவர்களைக் குறித்து, கர்தினால் டர்க்சன் அவர்கள் வருத்தம் தெரிவித்தார்.

இத்தகையைச் சூழலில், பாப்பிறை கிரகோரியன் பல்கலைக் கழகமும், ஏனைய பாப்பிறைப் பல்கலைக் கழகங்களும் இணைந்து, இந்த பட்டயப்படிப்பை மேற்கொண்டுள்ளது குறித்து தான் மகிழ்வதாக, கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

சுற்றுச்சூழல் உச்சி மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மக்கள் அறிவதற்கும், அத்தீர்மானங்களை அரசுகள் நடைமுறைப்படுத்த தூண்டுவதற்கும் இத்தகைய விழிப்புணர்வு வகுப்புக்கள் தேவை என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் உரையின் இறுதியில் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2018, 14:59