பேராயர் இவான் யுர்க்கோவிச் பேராயர் இவான் யுர்க்கோவிச்  

வன்முறை மிகுந்த சண்டைகள் அதிகரிப்பது குறித்து கவலை

வருங்காலத்தில் போர்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு, வேதிய ஆயுதங்கள் தடைசெய்யப்படுவது குறித்த சட்டங்கள் அவசியம் - பேராயர் யுர்க்கோவிச்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதரின் துன்பங்களையும், போர்களினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையும் குறைப்பதற்கு, உலகளாவிய சமுதாயம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஊக்கமளித்துள்ளது, திருப்பீடம்.

பெருமளவில் மக்களின் உயிர்களைக் காவுகொள்ளும் ஆயுதங்கள் தடைசெய்யப்படுவது மற்றும் கட்டுப்படுத்தப்படுவது குறித்து, அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட பிரதிநிதி, பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள்,

அபாயகரமான ஆயுதங்கள் களையப்படுவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள், தொடர்ந்து இடம்பெற வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அணு ஆயுதங்கள், உயிரிய மற்றும், வேதிய ஆயுதங்கள் உட்பட, பெருமளவு சேதங்களை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களைத் தடைசெய்வதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும், போர்களில் உலகளாவிய சட்டம் மதிக்கப்பட வேண்டும் மற்றும், பதட்டநிலைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கலந்துரையாடலும், பேச்சுவார்த்தையும் முக்கியம் என்பதைக் காட்டுகின்றது என்று, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.

வருங்காலத்தில் போர்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு, இத்தகைய ஆயுதங்கள் தடைசெய்யப்படுவது குறித்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும், இதற்கு, துணிச்சலும், உறுதியும் அவசியம் என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார்.     

பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார்,

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2018, 14:58