தேடுதல்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

"உலகப்போருக்கு பின், திருப்பீடமும் கத்தோலிக்கர்களும்"

நீதியின் மீது நாம் கொள்ளும் மதிப்பும், நாடுகளுக்கிடையே நிலவவேண்டிய நாகரீகமான உறவுகளும், மக்களின் நியாயமான விருப்பங்களும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் அடித்தளங்கள் - திருத்தந்தை 15ம் பெனடிக்ட்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

1918ம் ஆண்டு, முதல் உலகப்போர் முடிவுற்றதையடுத்து, சமாதான கூட்டங்கள் துவங்குவதற்கு முன்னரே, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், Quod Iam Diu என்ற குறுகிய திருமடல் வழியே, சமாதானத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

முதல் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் முதலாம் நூற்றாண்டு நினைவு, நவம்பர் 11ம் தேதி சிறப்பிக்கப்பட்டதையடுத்து, நவம்பர் 14, இப்புதனன்று, உரோம் நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

"உலகப்போருக்கு பின் உருவான உலகில், திருப்பீடமும் கத்தோலிக்கர்களும்" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், உலகப்போர் முடிவடைந்ததும், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களும், ஏனைய திருப்பீட அதிகாரிகளும் மேற்கொண்ட பல சமாதான முயற்சிகளை குறிப்பிட்டுப் பேசினார்.

நீதியின் மீது நாம் கொள்ளும் மதிப்பும், நாடுகளுக்கிடையே நிலவவேண்டிய நாகரீகமான உறவுகளும், மக்களின் நியாயமான விருப்பங்களும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் அடித்தளங்கள் என்று திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களும், ஏனைய திருப்பீட அதிகாரிகளும் வலியறுத்தி வந்துள்ளனர் என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

முதல் உலகப்போர், ஐரோப்பிய கண்டத்தை பெருமளவு சிதைத்துள்ள போதிலும், இந்த நிலையை தங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பாக, அரசுகளும், மக்களும் எண்ணவேண்டும் என்றும், குறிப்பாக, இப்போரில் வெற்றி கண்டவர்கள் பிறரை மரியாதையுடன் நடத்தவேண்டும் என்றும் கத்தோலிக்க உலகம் கூறிவந்துள்ளது என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2018, 14:52