தேடுதல்

நவம்பர் 21,  உலக மீன்பிடித்தொழில் நாள் நவம்பர் 21, உலக மீன்பிடித்தொழில் நாள் 

மீன்பிடித்தொழிலாளர் நலனில் திருப்பீடத்தின் 100 ஆண்டு அக்கறை

உலகெங்கும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள 5 கோடியே 80 இலட்சம் மக்களின் தொழிலுக்கு உரிய மாண்பும், அங்கீகாரமும் வழங்கப்படவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போர் மீது, கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பீடம் அக்கறை காட்டிவருகிறது என்றும், குறிப்பாக, 1957ம் ஆண்டு முதல் இந்த அக்கறை, திருப்பீடத்தின் ஒரு முக்கியப் பணியாக உருவெடுத்துள்ளது என்றும் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.

நவம்பர் 21, இப்புதனன்று உலக மீன்பிடித்தொழில் நாள் கடைபிடிக்கப்பட்டதையடுத்து, உரோம் நகரின் உணவு வேளாண்மை நிறுவனமான FAO தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

மனிதர்களுக்குரிய அடிப்படை உரிமைகளில் ஒன்றாக, தொழில் உரிமையும் உண்டு என்பதை வலியுறுத்தும்வண்ணம் இவ்வாண்டு நடைபெறும் கருத்தரங்கின் மையக்கருத்து அமைந்துள்ளது குறித்து, பேராயர் காலகர் அவர்கள் தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

2016ம் ஆண்டு வெளியான ஒரு புள்ளிவிவரத்தின்படி, அவ்வாண்டு, 17 கொடியே 10 இலட்சம் டன்கள் என்ற அளவில் மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டன என்றும், அவற்றில், 88 விழுக்காட்டு மீன்கள், மக்களின் உணவாக மாறின என்றும் தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், இந்த புள்ளி விவரங்கள், வெறும் பொருளாதாரத்தை மட்டுமல்ல, மாறாக, மக்களின் உணவுத் தேவையையும் வெளிச்சமிட்டு காட்டுகின்றன என்று கூறினார்.

உலகெங்கும் 5 கோடியே 80 இலட்சம் மக்கள் மீன்பிடித்தொழிலில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை எடுத்துரைத்த பேராயர் காலகர் அவர்கள், இத்தொழிலுக்கு உரிய மாண்பும், அங்கீகாரமும் வழங்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் தன் உரையில் முன்வைத்தார்.

மீன்பிடித்தொழிலை, பொருளாதார, வர்த்தக கண்ணோட்டங்களில் மட்டும் காண்பதை தவிர்த்து, இதனை, மனித உரிமைகள் என்ற கண்ணோட்டத்துடன் காண்பது இன்றையத் தேவை என்றும், குறிப்பாக, அடிப்படை மனித உரிமைகளின் அறிக்கை வெளியிடப்பட்ட 70ம் ஆண்டில் இந்தக் கண்ணோட்டம் அவசியம் என்றும் பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2018, 14:57