தேடுதல்

திருப்பீடத்தின் பிரதிநிதி பேராயர் ஈவான் யூர்க்கோவிச் திருப்பீடத்தின் பிரதிநிதி பேராயர் ஈவான் யூர்க்கோவிச் 

குடிபெயர்தல் என்ற முயற்சி, மனித உறவுகளை வளர்க்கிறது

குடிபுகும் மக்களை, அந்நாட்டின் சமுதாயத்தோடு ஒன்றிணைக்கும் முயற்சி, அம்மக்களின் சொந்த கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சியாக மாறக்கூடாது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே, மனித குலத்தில் விளங்கிய குடிபெயர்தல் என்ற முயற்சி, மனித உறவுகளை வளர்ப்பதற்கும், புதிய வழிகளில் கூட்டுறவு முயற்சிகளைத் தொடர்வதற்கும் உதவியாக இருந்துள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஐ.நா. அவை கூட்டத்தில் கூறினார்.

ஐ.நா. அவையின், குடிபெயர்தல் பன்னாட்டு நிறுவனம், ஜெனீவாவில் நடத்திய 109வது அமர்வில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்ற பேராயர் ஈவான் யூர்க்கோவிச் அவர்கள், நவம்பர் 28 இப்புதனன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

உலகின் பல நாடுகளில் நடைபெறும் பெரும்பாலான குடிபெயர்தல் முயற்சிகள் சட்டங்களுக்கு உட்பட்டே நிகழ்கின்றன என்பதையும், பிற நாடுகளில் குடியேறும் மக்கள், அந்நாடுகளின் வளர்ச்சிக்கு பெருமளவு உழைத்துள்ளனர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது என்று, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு நாடுகளில் நிலவும், வறுமை, பாகுபாடுகள், வேலையில்லா திண்டாட்டம், வன்முறைகள், சுற்றுச்சூழல் சீரழிவு, குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைத்தல் ஆகிய காரணங்கள், குடியேறுதல் என்ற அலைகளை உருவாக்குகின்றன என்பதை, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஒரு நாட்டில் குடிபுகும் மக்களை, அந்நாட்டின் சமுதாயத்தோடு ஒன்றிணைப்பது முக்கியம் என்றாலும், இந்த ஒருங்கிணைப்பு, குடிபுகும் மக்களின் சொந்த கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சியாக மாறக்கூடாது என்பதையும், பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2018, 15:24