ஐ.நா. அமைதி காப்பு படையில் இந்திய வீராங்கனைகள் ஐ.நா. அமைதி காப்பு படையில் இந்திய வீராங்கனைகள் 

அமைதி முயற்சிகளுக்கு திருப்பீடத்தின் முழு ஆதரவு உண்டு

ஐ.நா. அவையும், பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும், அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் திருப்பீடம் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமைதிப்பணிகள் என்பது, ஓரிடத்தில் மோதல்கள் வெடித்தபின் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்ற எண்ணத்தையும் தாண்டி, மோதல்கள் உருவாகாமல் காப்பதே அமைதிப்பணியின் முக்கிய அம்சம் என்பதை அண்மையக் காலங்களில் நாம் உணர்ந்து வருகிறோம் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.அவையில் கூறினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், "அமைதியை நிலைநாட்டும் செயல்பாடுகளின் அனைத்து அம்சங்கள்" என்ற தலைப்பில் நவம்பர் 1, இவ்வியாழனன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

மோதல்களைத் தவிர்த்தல், மோதல்களுக்குத் தீர்வு காணுதல், அமைதியைக் கட்டியெழுப்புதல் என்ற அனைத்து நிலைகளிலும், சமுதாயத்தின் பல்வேறு பகுதியினரை கலந்து ஆலோசித்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் பரிந்துரைத்தார்.

அமைதி முயற்சிகளில் பெண்களின் பங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், அமைதிக்காக பெண்கள் மேற்கொண்டுவரும் பல்வேறு வியக்கத்தக்க முயற்சிகளை, உலக அவைகள் உணர்ந்து, அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

மக்களை, குறிப்பாக, வலுவிழந்த சிறுபான்மை மக்களை கட்டாய குடிபெயர்வுக்கு உள்ளாக்கும் போக்கு அரசுகளிடையே அதிகரித்து வருவதைக் குறித்து தன் கவலையை வெளியிட்ட பேராயர் அவுசா அவர்கள், உலகின் பாதுகாப்பை பெரிதும் அச்சுறுத்திவரும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனையைக் குறித்தும் தன் கவலையை எடுத்துரைத்தார்.

ஐ.நா. அவையும், இன்னும் உலகின் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் திருப்பீடம் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கும் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையின் இறுதியில் உறுதி அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2018, 14:27