தேடுதல்

Vatican News
ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா 

அமைதியை நிலைநாட்ட, உரையாடல் கலாச்சாரம் அவசியம்

பல பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கவேண்டிய மதங்கள், தற்போது பிரச்சனைகளை உருவாக்கும் அரசியல் கருவிகளாக மாற்றப்படுகின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகில் நிலவும் வன்முறைகளை நீக்கி, அமைதியை நிலைநாட்ட, உரையாடலும், கூட்டுறவு முயற்சிகளும் அவசியம் என்ற கருத்தை, ஐ.நா. அவையின் கலாச்சாரக் கூட்டணி என்ற அமைப்பு தன் 8வது உலக மாநாட்டுக்குத் தெரிவு செய்திருப்பது குறித்து திருப்பீடம் மகிழ்வடைகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் கூறினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், 'வன்முறையைக் களைந்து அமைதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு' என்ற தலைப்பில் இச்செவ்வாயன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

மனித வாழ்வில் உருவாகும் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கவேண்டிய மதங்கள், பலவகையில் பயன்படுத்தப்பட்டு வருவதால், தற்போது, மதங்கள், பிரச்சனைகளை உருவாக்கும் அரசியல் கருவிகளாக மாற்றப்படுகின்றன என்பதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வருத்தத்தோடு குறிப்பிட்டார்.

போரையும், வன்முறைகளையும் வளர்ப்பதற்கு மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் தவறான போக்குகளைக் களைந்தெறியவும், வன்முறைகளுக்கு மாற்றாக உரையாடல் கலாச்சாரத்தை வளர்க்கவும் மதங்கள் உதவுமாறு உழைப்போம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அசிசி நகரில் நடைபெற்ற உலக அமைதி செப நாளன்று, மதத் தலைவர்கள் எடுத்த உறுதி மொழியை, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

Focolare இயக்கம், மற்றும் Sant’Egidio பிறரன்பு அமைப்பு போன்ற குழுக்கள் வழியாகவும், பள்ளிகள், கல்லூரிகள் வழியாகவும், கத்தோலிக்க திருஅவை, இளையோரிடையே, உரையாடல் கலாச்சாரத்தை வளர்த்து வருகிறது என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

22 November 2018, 15:05