UNRWAவுக்கு ஆதரவாக பாலஸ்தீனியர்கள் UNRWAவுக்கு ஆதரவாக பாலஸ்தீனியர்கள் 

UNRWA ஆற்றிவரும் பணிகளுக்கு, திருப்பீடம் பாராட்டு

தாய் நாட்டை இழந்து தவிக்கும் பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தோர், சரியான முறையில் பதிவு செய்யப்பட்டு, இம்மக்களுக்கு நிரந்தரமான தீர்வு ஒன்று காணப்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அண்மை கிழக்குப் பகுதியில் வாழும் ஏறத்தாழ 56 இலட்சம் பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தோருக்கு, ஐ.நா.அவை ஆற்றிவரும் பணிகளை, திருப்பீடம் பாராட்டுகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி, ஐ.நா. அவையில் உரையாற்றினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், புலம் பெயர்ந்தோருக்காகப் பணியாற்றும் UNRWA எனப்படும் ஐ.நா.வின் உதவி நிறுவனம், பாலஸ்தீனாவிலிருந்து புலம்பெயர்ந்து, வடகரை, காசா, ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியாவில் வாழும் மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளுக்கு, திருப்பீடத்தின் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இம்மக்களின் அடிப்படைத் தேவைகளான புகலிடம், கல்வி, நல ஆதரவு ஆகியவற்றிற்காக UNRWA நிறுவனம் ஆற்றிவரும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்த அதே வேளையில், இவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் விரைவில் கிடைக்காத நிலையில், இவ்வமைப்பின் பணிகள் தொடர வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

புலம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிவரும் UNRWA அமைப்பு, தற்போது 20 கோடி டாலர்கள் நிதி பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது என்பதையும், தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், தாய் நாட்டை இழந்து தவிக்கும் பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தோர், சரியான முறையில் பதிவு செய்யப்பட்டு, இம்மக்களுக்கு நிரந்தரமான தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

புலம்பெயர்ந்த பாலஸ்தீனிய மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படுவதுடன், அவர்களின் உரிமைகள் மற்றும் மாண்பு ஆகியவை மதிக்கப்படுவதற்குத் தேவையான வழிமுறைகள் காணப்படவேண்டும் என்றும், திருப்பீடத்தின் பிரதிநிதி பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் விண்ணப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2018, 15:46