தேடுதல்

Vatican News
அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த முன்னாள் கர்தினால் தியோடோர் மெக்காரிக் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த முன்னாள் கர்தினால் தியோடோர் மெக்காரிக்  (AFP or licensors)

முன்னாள் கர்தினால் தியோடோர் மெக்காரிக் குறித்த மறு ஆய்வு

சிறார் மீதான பாலுறவு நடவடிக்கைகள் மற்றும் ஏனைய பாலுறவு உரிமை மீறல்களை நடத்துவோர், மற்றும், அவைகளை மறைக்க துணைபோவோர் குறித்து எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டப்படாது, நடவடிக்கை எடுக்கப்படும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த முன்னாள் கர்தினால் தியோடோர் மெக்காரிக் (Theodore McCarrick) அவர்களைக் குறித்த முழு விவரங்களும் மீண்டும் ஆய்வு செய்யப்பட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், அவர் மீது எழுந்த புகார்கள் குறித்த அனைத்து விவரங்களும் திருப்பீடத்தின் தகவல் காப்பகங்களிடமிருந்து திரட்டப்பட வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

இது குறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திருப்பீடம், 1970ம் ஆண்டுகளில் கர்தினால் மெக்காரிக் அவர்கள், பாலுறவு முறையில் சிறார் ஒருவரிடம் தவறாக நடந்தார் என ஒருவர் குற்றஞ்சாட்டியது குறித்து 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் நியூ யாரக் உயர் மறைமாவட்டம் திருப்பீடத்திற்கு தெரியப்படுத்தியதையும், அது உண்மை என நிரூபணமானபோது, கர்தினால் மெக்காரிக் அவர்களின் கர்தினால் நியமனத்தை திருத்தந்தை திரும்பப் பெற்றார் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் கர்தினால் மெக்காரிக் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஏனைய குற்றச்சாட்டுக்கள் குறித்த விவரங்களையும், திருப்பீட அலுவலகங்களிடமிருந்து பெற்று, அது குறித்து நடுநிலையான முறையில் ஆய்வுகள் நடத்தப்படும் என திருப்பீடம் அறிவித்துள்ளது.

சிறார் மீது தவறான பாலுறவு மற்றும் ஏனைய உரிமை மீறல்களை நடத்துவோர், மற்றும், அவற்றை மறைக்க துணைபோவோர் குறித்து எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டப்படாமல், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறும் இந்த அறிக்கை, வரும் பிப்ரவரியில் உலகின் அனைத்து ஆயர் பேரவை தலைவர்களையும் திருத்தந்தை சந்திக்க உள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.

08 October 2018, 16:40