தேடுதல்

Vatican News
ஆயர் மாமன்றக் கூட்டத்தில் பங்குபெறும் இளையோர் ஆயர் மாமன்றக் கூட்டத்தில் பங்குபெறும் இளையோர்  (ANSA)

இளையோரின் வாழ்வு சாட்சியங்கள், அதிகமதிகமாகத் தேவை

உறுதியற்ற விசுவாசம் உள்ளவர்கள், தங்களின் உடன் சகோதரர்களுக்கு நற்செய்தியை எடுத்துரைப்பது இயலாத ஒன்று

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருமண வாழ்வுக்குத் தயாரித்தல், குடும்பத்தில் தந்தையின் இடம், இளம் குடியேற்றதாரர்கள், இளையோரின் வாழ்வு சாட்சியங்கள் ஆகியவை, ஆயர் மாமன்றக் கூட்டத்தின் இரண்டாம் நாளில் முக்கிய இடம் வகித்ததாக போலந்து ஆயர்கள் தெரிவித்தனர்.

இரண்டாம் நாள் கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் என்றும், சிலர், குடும்ப உறவுகள் முறிவுபட்டுக் கிடப்பது குறித்து கவலை கொண்டுள்ளதாகவும், திருமண தயாரிப்புக்கான மறைக்கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டியது குறித்து வலியுறுத்தியதாகவும் எடுத்துரைத்தார் போலந்து ஆயர் Marian Florczyk.

கடந்த காலங்களில் குடும்பத்தில் தந்தையின் இடம், முக்கியத்துவம் பெற்றதாக இருந்து, அவரின் விசுவாச வாழ்வு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது, ஆனால். அத்தகைய நிலை இன்று பல குடும்பங்களில் இல்லை என்பதை சில பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்ட ஆயர் Florczyk அவர்கள், உறுதியற்ற விசுவாசம் உள்ளவர்கள், தங்கள் உடன்வாழ்பவர்களுக்கு எவ்விதம் நற்செய்தியை அறிவிக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது என்றார்.

தங்கள் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு நற்செய்தியை எடுத்துரைக்க வேண்டிய இளையோரின் பணி குறித்தும், சில கிறிஸ்தவ அடிப்படைவாத குழுக்களால் எழும் அச்சுறுத்தல்கள் குறித்தும், சில பிரதிநிதிகள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறினார் ஆயர் Florczyk.

06 October 2018, 16:57