15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்றவர்கள் அனைவரோடும், திருத்தந்தை பிரான்சிஸ் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்றவர்கள் அனைவரோடும், திருத்தந்தை பிரான்சிஸ் 

15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இறுதி ஏடு

60 பக்கங்களில், 167 பத்திகளாக அமைந்துள்ள, 15வது உலக ஆயர்கள் மாமன்ற இறுதி ஏடு, மூன்று பகுதிகளையும், 12 பிரிவுகளையும் கொண்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 27, கடந்த சனிக்கிழமை பிற்பகல், 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இறுதி அமர்வு நிகழ்ந்த வேளையில், இந்த மாமன்றத்தின் முடிவான கருத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்பட்ட மாமன்ற இறுதி ஏடு, அரங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அனைவரின் ஒப்புதலையும் பெற்றது.

இந்த ஏடு, மாமன்றத்தில் பங்கேற்றோர் அனைவரின் ஒத்துழைப்போடு உருவானது என்றும், இவ்வேட்டில் கூறப்பட்டுள்ள அனைத்துக் கருத்துக்களும் மாமன்ற உறுப்பினர்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்றுள்ளது என்றும், இம்மாமன்றத்தின் ஒருங்கிணைப்பாளர், கர்தினால் Sérgio da Rocha அவர்கள் கூறினார்.

எம்மாவு சென்ற சீடர்களுடன் இயேசு உடன் நடந்து சென்றதை உருவகமாகக் கொண்டு நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தின் இறுதி ஏடு, இதே பயணத்தின் மூன்று நிலைகளை, தன் மூன்று பகுதிகளாகக் கொண்டுள்ளது.

முதல் பகுதி: "அவர்களோடு நடந்து சென்றார்"

முதல் பகுதியில், இளையோரின் உலகில் காணப்படும் எதார்த்தங்கள் குறித்த பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

இளையோர் சந்தித்துவரும் பிரச்சனைகளான, குடிபெயர்தல், தவறான வழிகளில் பயன்படுத்தப்படுதல், தூக்கியெறியும் கலாச்சாரம் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ள இப்பகுதியில், இப்பிரச்சனைகளுக்கு ஒரு சில தீர்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இரண்டாவது பகுதி: "அவர்கள் கண்கள் திறந்தன"

இளையோரிடையே இறைவன் பிரசன்னமாகியிருப்பதை, திருஅவை உணரும்போது, தன் 'கனமான, மெதுவான' போக்கைக் களைந்துவிட்டு, தன்னையே புதுப்பிக்க வழிகள் பிறக்கும் என்று இரண்டாம் பகுதியில், கூறப்பட்டுள்ளது.

மறைபரப்புப்பணியை வளர்ப்பது, இளையோரின் அழைத்தல், அவர்கள் தெளிந்து தேர்வதற்கு உதவியாக இருப்பது போன்ற கருத்துக்களும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

மூன்றாம் பகுதி: "அவர்கள் உடனே புறப்பட்டுச் சென்றனர்"

உயிர்ப்பின் முதல் சாட்சியாக விளங்கிய மகதலா மரியாவை, இளையோர் தங்கள் பணிகளின் அடையாளமாகக் கொண்டிருக்கவேண்டும் என்று, மாமன்ற தந்தையர், மூன்றாம் பகுதியில், பரிந்துரை செய்துள்ளனர்.

இளையோரைப் பற்றிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு, ஒவ்வொரு மறைமாவட்டத்திலும், பங்குத்தளத்திலும் உருவாக்கப்படவேண்டும் என்ற பரிந்துரை, மாமன்றத்தில், பல முறை முன்வைக்கப்பட்டு, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2018, 15:33