தேடுதல்

Vatican News
திருத்தந்தைக்கு இளையோர் தந்த கடிதம் திருத்தந்தைக்கு இளையோர் தந்த கடிதம்  (ANSA)

இளையோர் : திருத்தந்தையுடனும் ஆயர்களுடனும் இணைந்துள்ளோம்

திருத்தந்தையுடன் ஒருமைப்பாட்டை அறிவித்து, பல நிற கையெழுத்துக்களுடன் இளையோர் ஒப்படைத்த கடிதம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆயர் மாமன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்ற 20வது அமர்வு, இளையோரின் ஆடல், பாடலுடன் இடம்பெற்றது.

ஆயர் மாமன்ற பரிந்துரைகளின் தொகுப்பு குறித்த சிந்தனைகள் இடம்பெற்றுவரும் வேளையில், இவ்வெள்ளி மாலை அமர்வில், திருத்தந்தையுடன் கலந்துகொண்ட இளையோர், திருத்தந்தைக்கென உருவாக்கப்பட்ட ஒரு பாடலைப் பாட, அதற்கு ஆயர் மாமன்ற பொதுச் செயலர், கர்தினால் லொரென்ஸோ பால்திஸ்ஸேரி அவர்கள், பியானோ இசைக் கருவியை வாசிக்க, இவ்வமர்வு கோலாகலமாகத் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த அமர்வின் முக்கியப் பகுதியாக, ஆயர் மாமன்ற இளையோர் பிரதிநிதிகள் அனைவரும் வெவ்வேறு நிறங்களில் கையெழுத்திட்டு, 'நாங்கள் எப்போதும் திருத்தந்தையோடும் திருஅவை ஆயர்களோடும் இணைந்திருப்போம்' என எழுதி, அம்மடலை திருத்தந்தைக்கு வழங்கினர்.

'திருத்தந்தையே, உமக்காகச் செபிக்கிறோம், உம் கனவுகளைப் பகிர்கிறோம்' எனவும் இம்மடலில் கூறும் இளையோர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் மீது கொண்டுள்ள அக்கறைக்கு தங்கள் நன்றியையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த அமர்வின்போது, ஆயர் மாமன்ற உறுப்பினர்களாக 16 ஆயர்கள் தேர்வுச் செய்யப்பட்டனர். இவர்களுடன், மேலும் 4 பிரதிநிதிகளை, திருத்தந்தை நியமிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

27 October 2018, 17:26