தேடுதல்

Vatican News
Civiltà Cattolica மையத்தின் இயக்குனர், அருள்பணி அந்தோனியோ ஸ்பதாரோ Civiltà Cattolica மையத்தின் இயக்குனர், அருள்பணி அந்தோனியோ ஸ்பதாரோ 

"காலத்தின் ஞானத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்" நூல் வெளியீடு

30 நாடுகளைச் சேர்ந்த 250 முதியோருடன் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பாக வெளிவந்த "காலத்தின் ஞானத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்" என்ற நூல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 23, இச்செவ்வாய் மாலை, உரோம் நகரில் அமைந்துள்ள புனித அகுஸ்தீன் உயர் கல்வி மையத்தில், இயேசு சபையினரால் நடத்தப்படும் 'லொயோலா அச்சகம்' வடிவமைத்துள்ள "காலத்தின் ஞானத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்" என்ற நூல் வெளியிடப்பட்டது.

உரோம் நகரில் இயங்கிவரும் Civiltà Cattolica மையத்தின் இயக்குனர், அருள்பணி அந்தோனியோ ஸ்பதாரோ அவர்கள், 30 நாடுகளைச் சேர்ந்த 250 முதியோருடன்  மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

முதியோர் என்ற நிலத்தில் வேரூன்றி வளர்வது, இளையோரின் வாழ்வுக்கு மிகவும் அவசியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவந்துள்ள எண்ணம், இந்நூல் அமைய வழிவகுத்தது என்று, இந்நூலின் தொகுப்பாசிரியர் ஸ்பதாரோ அவர்கள், நூல் வெளியீட்டு விழாவில் கூறினார்.

வேலை, போராட்டம், அன்பு, மரணம், நம்பிக்கை என்ற ஐந்து பிரிவுகளாக அமைந்துள்ள இந்நூலில், ஒவ்வொரு பிரிவிலும் அந்தந்த கருத்தைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள எண்ணங்கள் முதலில் பதிவாகியுள்ளன என்றும், அவற்றைத் தொடர்ந்து, முதியோரின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நூலுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் அணிந்துரையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 October 2018, 16:50