தேடுதல்

Vatican News
மாமன்ற அமர்வுகளில் ஒன்று - இடது ஓரத்தில் அமர்ந்திருப்பவர் அருள்பணி ரொஸ்ஸானோ சாலா மாமன்ற அமர்வுகளில் ஒன்று - இடது ஓரத்தில் அமர்ந்திருப்பவர் அருள்பணி ரொஸ்ஸானோ சாலா  (Vatican Media)

'செவிமடுத்தல்', மாமன்றத்தின் தனியொரு அடையாளமாக விளங்கும்

கேட்க இயலாமல் திணறிக்கொண்டிருக்கும் திருஅவைக்கு, 'செவிமடுத்தல்' என்ற தேவை அதிகம் உள்ளது, குறிப்பாக, இளையோருக்கு செவிமடுக்கும் தேவை, திருஅவைக்கு அதிகம் உள்ளது - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆயர்கள் மாமன்றத்தின் துவக்கத் திருப்பலியிலும், முதல் அமர்வின் துவக்க உரையிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'செவிமடுத்தல்' என்ற கருத்தை வலியுறுத்தியிருப்பது, இந்த மாமன்றத்தின் ஒரு முக்கிய பண்பாக அமையும் என்று, மாமன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் கூறினார்.

நடைபெறும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இரு சிறப்புச் செயலர்களாக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான, சலேசிய அருள்பணியாளர் ரொஸ்ஸானோ சாலா (Rossano Sala) அவர்கள், வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியொன்றில், செவிமடுத்தல் என்ற பண்பு, இந்த மாமன்றத்தின் தனியொரு அடையாளமாக விளங்கும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.

மூச்சுவிட முடியாமல் திணறுவோருக்கு, ஆக்சிஜன் அவசியம் என்ற உருவகத்தைப் பயன்படுத்தி, கேட்க இயலாமல் திணறிக்கொண்டிருக்கும் திருஅவைக்கு, 'செவிமடுத்தல்' என்ற தேவை அதிகம் உள்ளது, குறிப்பாக, இளையோருக்கு செவிமடுக்கும் தேவை, திருஅவைக்கு அதிகம் உள்ளது என்று திருத்தந்தை கூறியதை, அருள்பணி சாலா அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

'செவிமடுத்தலை' நடைமுறைப்படுத்த, ஒவ்வொரு அமர்விலும், ஐந்து உறுப்பினர்களின் பகிர்வுக்குப் பின், மூன்று நிமிட அமைதியும், செபமும் கடைபிடிக்கப்பட, திருத்தந்தை விடுத்த அழைப்பு, ஒரு துணிவான ஆலோசனை என்று கூறிய அருள்பணி சாலா அவர்கள், இந்தச் செயல்முறை, ஓர் ஆன்மீக அனுபவமாக மாறிவருகிறது என்று எடுத்துரைத்தார்.

எந்த ஒரு கூட்டத்திலும், கலந்துரையாடல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அமைதியும் முக்கியம் என்பதையும், தெளிந்து தேர்தல் என்ற கருத்துக்கு, அமைதியும், செபமும் அவசியம் என்பதையும், அருள்பணி சாலா அவர்கள், தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

05 October 2018, 15:46