ஆயர் மாமன்ற கூட்டம் ஆயர் மாமன்ற கூட்டம் 

மாமன்றத்தில் பங்கேற்போர், ஏற்பாடுகள் குறித்த விவரங்கள்

உலக ஆயர்கள் மாமன்றத்தில், 267 மாமன்றத் தந்தையர், பல்வேறு துறைகளைச் சார்ந்த 23 நிபுணர்கள், மற்றும், 34 இளையோர் உட்பட, 49 பார்வையாளர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 3, இப்புதன் பிற்பகல் 4.30 மணிக்கு, 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்வு துவங்கிய வேளையில், ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலர், கர்தினால் லொரென்சோ பால்திஸ்ஸேரி அவர்கள், மாமன்றத்தில் கலந்துகொள்வோரின் விவரங்களையும், மாமன்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட தயாரிப்புக்களையும் குறித்து தன் துவக்க உரையில் விளக்கிக் கூறினார்.

என்றும் இளமையோடு இருக்கும் கிறிஸ்துவின் முகத்தை புதுப்பிக்கும் வண்ணம் நிகழ்ந்த இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் குறித்து அருளாளரான திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இச்சங்கத்தின் இறுதியில் கூறிய சொற்களை, கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள், தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

மாமன்றத்தில் பங்கேற்போரின் விவரங்கள்

உலகின் பல்வேறு ஆயர் பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 182 பிரதிநிதிகள், துறவு சபைகளின் சார்பாக பங்கேற்கும் 10 பிரதிநிதிகள், மற்றும் திருப்பீடத்தின் பல்வேறு பேராயங்கள், அவைகள் சார்பில் பங்கேற்கும் 16 பிரதிநிதிகள் உட்பட, 267 மாமன்றத் தந்தையர்கள் பங்கேற்கின்றனர் என்ற விவரங்களை, கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள், தன் உரையில் வழங்கினார்.

இவர்களைத் தவிர, பல்வேறு துறைகளைச் சார்ந்த 23 நிபுணர்கள், மற்றும், மாமன்ற அமர்வுகளில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்ள 34 இளையோர் உட்பட, சிறப்பான அழைப்பு பெற்றுள்ள 49 பேரைக் குறித்தும், கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள், தன் துவக்க உரையில் குறிப்பிட்டார்.

மாமன்றத்தின் தயாரிப்புக்கள்

வலைத்தளங்கள், முகநூல் போன்ற தொடர்புகள் வழியே, உலகெங்கும் அனுப்பப்பட்ட கருத்துக்கணிப்பு கேள்விகளுடன், இந்த மாமன்றத்தின் தயாரிப்புக்கள், 2017ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி ஆரம்பமானது என்று கூறிய கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள், ஜூன் மாதம் முதல், டிசம்பர் மாதம் முடிய 2,21,000 தொடர்புகள் வழியே அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு, 1,00,500 பேர் பதில் அனுப்பினர் என்று கூறினார்.

மாமன்றத்தின் இரண்டாவது தயாரிப்பாக, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இளையோரின் இன்றைய நிலை என்பதைக் குறித்துப் பேச, பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது என்றும், இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள பல்வேறு துறைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்றனர் என்றும், கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள் கூறினார்.

இந்த மாமன்றத்தின் முக்கிய தயாரிப்பாக, இவ்வாண்டு மார்ச் மாதம் 19ம் தேதி முதல், 24ம் தேதி முடிய, உரோம் நகரில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தில், உலகின் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் என்று கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

தன் துவக்க உரையின் இரண்டாம் பகுதியில், கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள், இந்த மாமன்றம் நடைபெறும் வழிமுறைகளைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2018, 15:38