மாமன்றம் குறித்த விவரங்களை வெளியிடும் செய்தியாளர்கள் கூட்டம் மாமன்றம் குறித்த விவரங்களை வெளியிடும் செய்தியாளர்கள் கூட்டம் 

ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்வு குறித்த விவரங்கள்

அடுத்த தலைமுறையினருக்கு, விசுவாசத்தை வழங்குவதில், குடும்பங்களின் பங்கு, மற்றும், இளையோரிடையே திருஅவையின் நம்பகத்தன்மை என்ற இரு கருத்துக்கள், உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் நாள் அமர்வில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

விசுவாசத்தை, அடுத்த தலைமுறையினருக்கு வழங்குவதில் குடும்பங்களின் பங்கு என்ன என்பது குறித்தும், இளையோரிடையே திருஅவை எவ்விதம் நம்பகத்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பது குறித்தும், உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் நாள் அமர்வில் விவாதிக்கப்பட்டன என்று, தகவல் தொடர்பு திருப்பீட அவையின் தலைவர், பாவொலோ ருஃபீனி (Paolo Ruffini) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

அக்டோபர் 3, இப்புதனன்று வத்திக்கானில் துவங்கிய 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல்நாளான அக்டோபர் 4ம் தேதி, மாமன்ற அரங்கத்தில் நிகழ்ந்த கருத்துப்பரிமாற்றங்கள் குறித்து, இவ்வியாழன் பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய ருஃபீனி அவர்கள், இந்த அமர்வுகளில், மாமன்றத் தந்தையர், மற்றும், இளையோர், 25 பேர், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர் என்று கூறினார்.

திருப்பீட செய்தித் தொடர்புத் துறையின் தலைவர், கிரெக் புர்க், மாமன்றத்தில் கலந்துகொள்ள அழைப்பு பெற்றிருந்த பேராசியர் கியாரா ஜியாக்கார்தி, மற்றும், மாமன்றத்தில் கலந்துகொள்வோரில் மிக இளவயதுடைய வியட்நாம் இளைஞர் Joseph Cao Huu Minh Tri ஆகியோர், இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இளையோரைப் புரிந்துகொள்வது, ஆயர்களுக்கு கடினமாக இருந்தாலும், அவர்களில் பலர், உண்மையான அக்கறையுடன் முயற்சிகள் செய்வது, மனதுக்கு உற்சாகம் அளிக்கிறது என்று, 21 வயது இளைஞர் Minh Tri செய்தியாளர்களிடம் கூறினார்.

மாமன்ற அரங்கத்தில் ஐந்து பேர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதும், 3 நிமிட அமைதி செபம் நடைபெறுவது, மிகுந்த பலனளிக்கிறது என்று, ருஃபீனி அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2018, 15:41