தேடுதல்

அக்டோபர் 25ம் தேதி ஆயர் மாமன்ற பிரதிநிதிகள் கலந்துகொண்ட திருப்பயணம் அக்டோபர் 25ம் தேதி ஆயர் மாமன்ற பிரதிநிதிகள் கலந்துகொண்ட திருப்பயணம் 

உலக ஆயர் மாமன்ற பிரதிநிதிகளின் திருப்பயணம்

உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ளும் கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் என 300க்கும் அதிகமானோர், உரோம் நகரில் மேற்கொண்ட திருப்பயணம், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவுற்றது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்கும் கர்தினால்கள், ஆயர்கள், மற்றும் ஏனைய பிரதிநிதிகள், அக்டோபர் 25, இவ்வியாழன் காலை 8.30 மணிக்கு, உரோம் நகரின் தோன் ஓரியோனே மையத்திலிருந்து புறப்பட்ட ஒரு திருப்பயணத்தில், கலந்துகொண்டனர்.

புதிய வழி நற்செய்தி அறிவுப்புப்பணி திருப்பீட அவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் திருப்பயணம், Via Francigena da Monte Mario என்ற வழியில், ஏறத்தாழ 6 கி.மீ. தூரம் நடைப்பயணமாக கடந்து, 11.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தை சென்றடைந்தது.

இத்திருப்பயணத்தின்போது, மூன்று இடங்களில், திருப்பயணிகள் கூடி, விவிலிய வாசகத்தை வாசித்து, ஒரு சில மணித்துளிகள் அமைதியில் செபித்தனர்.

திருப்பயணத்தின் இறுதிக் கட்டமாக, புனித பேதுருவின் கல்லறையில் கூடிய மாமன்ற தந்தையரும், ஏனையப் பிரதிநிதிகளும், விசுவாசப் பிரமாணத்தை அறிக்கையிட்டனர்.

இத்திருப்பயணத்தின் நிறைவில், நண்பகல் 12 மணிக்கு, ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலர் கர்தினால் லொரென்ஸோ பால்திஸ்ஸேரி அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் உட்பட, மாமன்றப் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Via Francigena, என்றழைக்கப்படும் வழி, ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து, உரோம் நகரை அடைய, திருப்பயணிகளாலும், வர்த்தகர்களாலும் பயன்படுத்தப்பட்ட வழி என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் உள்ள கான்டர்பரி பேராலயத்தின் தென் வாசலிலிருந்து புறப்பட்ட Via Francigena, என்ற இந்தத் திருப்பயணப் பாதை, பிரான்ஸ், மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைக் கடந்து, உரோம் நகரையும், பின்னர், புனித பூமியின் எருசலேம் நகரையும் அடைந்தது என்றும், கான்டர்பரி பேராலயத்திலிருந்து, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்திற்கு, 2,083 கி.மீ. தூரம் என்றும், வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2018, 14:22