தேடுதல்

Vatican News
இளையவர் பெர்சிவால் ஹோல்ட் (இடமிருந்து இரண்டாவது) செய்தியாளர்கள் கூட்டத்தில்.... - கோப்புப் படம் இளையவர் பெர்சிவால் ஹோல்ட் (இடமிருந்து இரண்டாவது) செய்தியாளர்கள் கூட்டத்தில்.... - கோப்புப் படம் 

ஆயர்கள் மாமன்றத்தில் இந்திய இளையோர் பிரதிநிதியின் பகிர்வு

இளையோர், கொழுந்துவிட்டு எரியும் வேளையில், அந்தச் சுடரை, தகுந்த முறையில் தூண்டிவிடும் பொறுப்பு, திருஅவைக்கு உள்ளது - இந்திய இளையோர் பிரதிநிதி பெர்சிவால் ஹோல்ட்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நெருப்பாகச் செயலாற்றும் இளையோர், கொழுந்துவிட்டு எரியும் வேளையில், அணைந்துபோகும் வாய்ப்பு உள்ளதால், அருகிலிருந்து, சரியான முறையில் எரியும்படி, அந்தச் சுடரைத் தூண்டிவிட்டவண்ணம் இருக்கவேண்டிய பொறுப்பு, திருஅவைக்கு உள்ளது என்று, இச்செவ்வாய் காலை, உலக ஆயர்கள் மாமன்றத்தில், இந்திய இளையோர் பிரதிநிதி, பெர்சிவால் ஹோல்ட் அவர்கள் கூறினார்.

வத்திக்கானில் நடைபெறும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில், இந்திய இளையோர் சார்பாக, பங்கேற்கும் இந்திய இளையோர் இயக்கத்தின் தேசியத்தலைவர், பெர்சிவால் ஹோல்ட் அவர்கள், இச்செவ்வாய் காலை அமர்வில் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

இன்றைய உலகில், அர்ப்பண வாழ்வை மேற்கொண்டோரின் எடுத்துக்காட்டைவிட, எளிய மக்களின் எடுத்துக்காட்டு, இளையோருக்கு அதிகத் தூண்டுதலாக அமைந்துள்ளது என்ற உண்மை, சிந்திக்கப்படவேண்டியது என்று, இளையவர் ஹோல்ட் அவர்கள் கூறினார்.

அருள்பணியாளர்களின் பணி, வெறும் சடங்குமுறையைச் சார்ந்ததாக இராமல், இளையோரின் பிரச்சனைகளைப் புரிந்து, அவர்களை வழிநடத்தும் திறமை பெற்றதாக இருக்கவேண்டும் என்பதை, ஹோல்ட் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

இன்றைய இந்தியாவில் பெருநகரங்களின் நாகரீக வாழ்வில் தங்களையே இழக்கும் மக்களையும், கிராமங்களில், கல்வியறிவின்மை, ஏழ்மை, அடக்குமுறை ஆகிய கொடுமைகளால் துன்புறும் மக்களையும் காண முடிகிறது என்று, ஹோல்ட் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

இன்றைய உலகில், பல்வேறு ஆக்கப்பணிகளில், இளைய சமுதாயத்தை ஈடுபடுத்துவதில், திருஅவை முன்னோடியாக இருக்க முடியும், மற்றும், இருக்க வேண்டும் என்பதை, ஹோல்ட் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

இளையோரை மையப்படுத்திய ஆயர்களின் கூட்டங்கள், ஒவ்வொரு நாட்டிலும், தலத்திருஅவைகளிலும் நிகழவேண்டும், மற்றும், ஒவ்வொரு பங்குத்தளத்திலும் இளையோர் அமைப்புகள் உருவாக்கப்பட்டு, ஊக்கமளிக்கபப்ட்ட வேண்டும் என்று, இந்திய இளையோர் பிரதிநிதி, பெர்சிவால் ஹோல்ட் அவர்கள், தன் உரையில் விண்ணப்பித்தார்.

16 October 2018, 17:10