திருத்தந்தையுடன் கர்தினால் செர்ஜியோ தா ரோக்கா திருத்தந்தையுடன் கர்தினால் செர்ஜியோ தா ரோக்கா  

தெளிந்து தேர்தல் வழியில் மாமன்றத் தந்தையர்

தெளிந்து தேர்தலை மையமாகக் கொண்டு நடைபெறும் மாமன்றத்தில், இளையோருக்கு, தெளிந்து தேர்தலைப் பரிந்துரைப்பதற்குமுன், மாமன்றத் தந்தையர் அவ்வழி நடக்க கடமைப்பட்டுள்ளோம் – கர்தினால் ரோக்கா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தெளிந்து தேர்தல் என்ற வழிமுறை, கத்தோலிக்கத் திருஅவையின் தனித்துவமிக்க ஒரு வழிமுறை என்றும், இந்த வழிமுறையை, உலக ஆயர்கள் மாமன்றத்தின் முக்கிய செயல்பாடாக கடைபிடிப்போம் என்றும், 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒருங்கிணைப்பாளரான கர்தினால் செர்ஜியோ தா ரோக்கா அவர்கள் கூறினார்.

அக்டோபர் 3, இப்புதனன்று பிற்பகல் உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்வில் பேசிய கர்தினால் ரோக்கா அவர்கள், "இளையோர், நம்பிக்கையும் அழைத்தலின் தெளிந்து தேர்தலும்" என்ற தலைப்பில் நடைபெறும் மாமன்றத்தில், இளையோருக்கு, தெளிந்து தேர்தலை ஒரு வழிமுறையாகப் பரிந்துரைப்பதற்குமுன், மாமன்ற தந்தையர் அவ்வழி நடக்க கடமைப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

மாமன்றத்தின் தயாரிப்பு ஏடாக வழங்கப்பட்டுள்ள Instrumentum laboris ஏட்டில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில், பகிர்தல், பொருள்தருதல், தெரிவு செய்தல் என்ற மூன்று நிலைகளில் ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் என்று, கர்தினால் ரோக்கா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இறைவனும், இறைமகன் இயேசுவும் வரலாற்றில் தொடர்ந்து பேசுகின்றனர் என்பதை மனதில் கொண்டு, இங்கு நடைபெறும் அனைத்து பகிர்வுகளிலும் திறந்த உள்ளத்துடன் பங்கேற்கவும், கவனமுடன் அடுத்தவருக்குச் செவிமடுக்கவும் வேண்டும் என்று கர்தினால் ரோக்கா அவர்கள் விண்ணப்பித்தார்.

ஒவ்வொரு தலத்திருஅவையின் பிரதிநிதிகளாக வந்திருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் தலத்திருஅவையின் எண்ணங்களையும், ஏக்கங்களையும் வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளோம் என்று, கர்தினால் ரோக்கா அவர்கள், தன் துவக்க உரையில் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2018, 15:50