உலக ஆயர்கள் மாமன்றத்தின்  பிரதிநிதிகளுக்கு புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா மறையுரை வழங்கினார் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பிரதிநிதிகளுக்கு புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா மறையுரை வழங்கினார்  

பேதுருவிடம் காணப்பட்ட இளமைத் துடிப்பு

இளையோரிடம் காணப்படும் தாராள மனம், எதையும் துடிப்புடன் செய்வது, போன்ற பண்புகள் புனித பேதுருவிடம் இருந்தன - பேராயர் ஃபிசிக்கெல்லா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தூதரான புனித பேதுருவின் கல்லறையில் கூடியிருக்கும் நாம், அவருடைய வாழ்வு, அழைத்தல் ஆகியவற்றை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறோம் என்று, பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள், இவ்வியாழனன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

பேதுருவின் வாழ்வில் நிகழ்ந்த சில தருணங்கள்

15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, அக்டோபர் 25, இவ்வியாழனன்று, மாமன்றத்தில் கலந்துகொள்ளும் கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் என 300க்கும் அதிகமானோர், உரோம் நகரில் மேற்கொண்ட திருப்பயணத்தின் இறுதியில், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், நிறைவேற்றப்பட்ட திருப்பலியில், பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், பேதுருவின் வாழ்வில் நிகழ்ந்த சில முக்கியத் தருணங்களை, தன் மறையுரையில் பகிர்ந்துகொண்டார்.

பேதுரு இளைஞனாக இருந்தபோது...

"நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" (யோவான் 21:18) என்று இயேசு பேதுருவிடம் கூறியச் சொற்களை, தன் மறையுரையின் துவக்கத்தில் பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் குறிப்பிட்டார்.

இயேசுவுக்கும், பேதுருவுக்கும் இடையே நிகழ்ந்த முதல் சந்திப்பின்போது, மீன்பிடிப்பதில் அனுபவமற்ற இளையவர் இயேசு, மீன்பிடித் தொழில் தேர்ச்சி பெற்றிருந்த பேதுருவிடம் வலைகளை வீசச் சொன்ன வேளையில், "உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்று பேதுரு கூறியதில், அவரது நம்பிக்கை வெளியானது என்று பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் எடுத்துரைத்தார்.

பேதுருவிடம் காணப்பட்ட இளமைத் துடிப்பு

இளையோரிடம் காணப்படும் பல பண்புகள் புனித பேதுருவிடம் இருந்தன என்பதைக் குறிப்பிட்ட பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், தாராள மனம், எதையும் துடிப்புடன் செய்வது, தன் தலைவரைக் காப்பதற்கு வாளை பயன்படுத்துவது என்ற சில தருணங்களைச் சுட்டிக்காட்டினார்.

இயேசு கைதான வேளையில், அவரை மறுதலித்து, கைவிட்டு ஓடிவிட்ட பேதுரு, மனம் நொந்து, மனம் திரும்பி, மீண்டும் இயேசுவிடம் முழுமையாக சரண் அடைவதையும் காண்கிறோம் என்று பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.

ஆயர் மாமன்றப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இச்சிறப்புத் திருப்பயணத்தின் இறுதியில், நண்பகல் 12 மணிக்கு, ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலர் கர்தினால் லொரென்ஸோ பால்திஸ்ஸேரி அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் உட்பட, மாமன்றப் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2018, 15:57