ஆயர்கள் மாமன்ற அரங்கத்தில் நடைபெறும் பொது அமர்வு ஆயர்கள் மாமன்ற அரங்கத்தில் நடைபெறும் பொது அமர்வு 

மாமன்ற கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு

15வது உலக ஆயர்கள் மாமன்ற கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு ஒரு முன்வரைவாக இச்செவ்வாய் காலை அரங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

“இளையோர், நம்பிக்கையும், அழைத்தல் சார்ந்த தெளிந்து தேர்தலும்” என்ற மையக்கருத்துடன், இம்மாதம் 3ம் தேதி துவங்கிய உலக ஆயர்கள் மாமன்றம், இறுதி வார பணிகளில் ஈடுபட்டிருக்கும் வேளையில், இச்செவ்வாய்க்கிழமை காலையில், இதுவரை இடம்பெற்ற கருத்துப் பகிர்வுகளின் தொகுப்பு, ஒரு முன்வரைவாக மாமன்ற அரங்கத்தில் வழங்கப்பட்டது.

இந்த முன்வரைவு வெளியிடப்பட்ட வேளையில் அரங்கத்தில் இருந்த 252 மாமன்றத் தந்தையர்கள், இதனை, பலத்த கரவொலியுடன் வரவேற்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இத்திங்கள் மாலைவரை இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும், பரிந்துரைகளை உள்ளடக்கிய இந்த முன்வரைவை, ஆயர்கள் மாமன்றத்தின் சிறப்புச் செயலர்களான, இயேசு சபை அருள்பணியாளர் ஜியாக்கமோ கோஸ்தா அவர்களும், சலேசிய அருள்பணியாளர், ரொஸ்ஸானோ சாலா அவர்களும் முன்வைத்தனர்.

மாமன்ற வழிகாட்டியாக உருவாக்கப்பட்டிருந்த Instrumentum laboris ஏட்டின் அடிப்படையிலும், இரு ஆண்டுகளாக இளையோர் பகிர்ந்துகொண்ட கருத்துக்களுக்குச் செவிமடுத்ததன் அடிப்படையிலும், ஆயர் மாமன்ற அமர்வுகளில் வெளியான கருத்துக்களின் உதவியோடும் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏடு, 173 பகுதிகளைக் கொண்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏட்டைக் குறித்து மாமன்ற தந்தையர் விவாதங்களை மேற்கொண்டபின், அவர்களுடைய கருத்துக்களையும் உள்ளடக்கிய மாமன்ற ஏடு, திருத்தந்தையிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அவரது அதிகாரப்பூர்வ ஒப்புதலுடன், இந்த ஏடு, திருஅவை முழுவதற்கும், சிறப்பாக, இளையோருக்கும், அவர்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கும் வழங்கப்படும் என்றும், 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒருங்கிணைப்பாளர், கர்தினால் Sérgio da Rocha அவர்கள் கூறினார்.

ஆயர் மாமன்றத்தின் செவ்வாய் காலை அமர்வை, செபத்துடன் துவக்கிய மாமன்றத் தந்தையர்களில் ஒருவர், "எழுந்து சென்று, என் ஆலயத்தைச் சீராக்கு" என்று அசிசி நகர் புனித பிரான்சிஸிடம் சிலுவையில் அறையுண்டிருந்த இயேசு கூறிய சொற்கள், இன்றைய இளையோருக்கும் கூறப்பட்டுள்ளன என்பதை நினைவுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2018, 17:31