தேடுதல்

போஸே குழுமத்தின் உலகத் தலைவரான என்சொ பியாங்கி போஸே குழுமத்தின் உலகத் தலைவரான என்சொ பியாங்கி 

மாமன்றத்தில் நிலவும் உலகளாவிய கண்ணோட்டம்

பொதுவாக, மதம் சார்ந்த கூட்டங்களில் பேச்சுக்கள் அதிகம் இடம்பெறுவதற்கு ஒரு நல்ல மாற்றமாக, நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றத்தில், அமைதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது - போஸே குழுமத் தலைவர் என்சொ பியாங்கி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக ஆயர்கள் மாமன்றத்தில் உண்மையிலேயே ஓர் உலகளாவிய கண்ணோட்டம் நிலவுகிறது என்றும், கத்தோலிக்கத் திருஅவையில் வாழும் இளையோர், அதில் இணையாத இளையோர் ஆகியோரின் சார்பாக, மாமன்றத்தில் கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்படுவது, புத்துணர்வைத் தருகிறது என்றும், போஸே குழுமத்தின் உலகத் தலைவரான என்சொ பியாங்கி (Enzo Bianchi) அவர்கள் கூறினார்.

மாமன்றத்தில் பங்கேற்க சிறப்பு அழைப்பு பெற்றுள்ள போஸே குழுமத்தின் தலைவரான பியாங்கி அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், துன்புறும் திருஅவையின் குரலையும், தற்காலத்தின் பாதிப்புக்களால் மாறிவரும் திருஅவையின் குரலையும் மாமன்ற அமர்வுகளில் கேட்கமுடிகிறது என்று கூறினார்.  

இத்தாலியின் போஸே எனுமிடத்தில், துறவு இல்லம் ஒன்றை நிறுவியுள்ள பொதுநிலையினரான பியாங்கி அவர்கள், தன் குழுமத்தின் பல்வேறு நிகழ்வுகளில், இளையோர், பெருமளவில் பங்கேற்பதால், தனக்கு இந்த அழைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தான் நம்புவதாகக் கூறினார்.

பொதுவாக, மதம் சார்ந்த கூட்டங்களில், பேச்சுக்கள் அதிகம் இடம்பெறுவதே வழக்கம் என்பதைச் சுட்டிக்காட்டிய பியாங்கி அவர்கள், நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றத்தில், அமைதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது, தேவையான ஒரு மாற்றம் என்று, தன் பேட்டியில் கூறினார்.

கொள்கைத் திரட்டுக்களை ஏடுகளாக வழங்குவதற்கு மட்டும் மாமன்றங்கள் நடைபெறுவதில்லை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்ட பியாங்கி அவர்கள், இந்த மாமன்றம், இளையோருக்கு வழங்கவிருக்கும் கருத்துக்களைக் கேட்க, உலக இளையோர் அனைவரும் காத்திருக்கின்றனர் என்று எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2018, 16:45