Cerca

Vatican News
ஈரான் தலை நகரில் இளையோர் ஈரான் தலை நகரில் இளையோர்  (ANSA)

வாரம் ஓர் அலசல் - இளையோரும் நுகர்வு கலாச்சாரமும்

வத்திக்கனில் இளையோர் பற்றி உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்று வருகிறது. இளைய சமுதாயம் உண்மையான அன்பினால் அடுத்தவரோடு உறவுகொள்வதற்கு அழைக்கப்படுகின்றனர்

மேரி தெரேசா & அ.பணியாளர்கள் எம்மானுவேல், கிறிஸ்டி ச.ச - வத்திக்கான்

இக்காலத் தலைமுறைகளில், கட்டற்ற நுகர்வு கலாச்சாரம் பெருகி வருவதைப் பரவலாகக் காண முடிகின்றது. இக்கலாச்சாரத்தில் இளையோர் அதிகம் ஊறிப்போய் இருக்கின்றனர். எனவே இளையோர் மனித உறவுகளை மையப்படுத்தி வாழ்வதற்கு சலேசிய சபை அருள்பணியாளர்கள் எம்மானுவேல் அவர்களும், கிறிஸ்டி அவர்களும், இன்றைய நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கின்றனர். அவர்களின் பகிர்வுகள் இதோ...

இளையோரும் நுகர்வு கலாச்சாரமும்

நம்மைப் படைத்த கடவுளை அன்பு செய்வதும், நம்முடைய சகோதர சகோதரிகளை அன்பு செய்வதும், நம்முடைய அழைப்பாகும். நம்முடைய கிறித்தவ அடையாளமாகும். அன்பு என்பதே கிறித்தவ வாழ்வின் மையமாகும். அன்பு இல்லாதோர் இறைவனை அறியாதவர்.

அனுபவம்...

ஒரு முறை இளைஞர்களுக்கான மூன்று நாள் தியானம் ஒன்று நடத்திக்கிட்டு இருந்தேன்… வந்ததிலிருந்தே ஒரு தம்பிய கவனிச்சேன்… எப்பவுமே கொஞ்சம் சோகமாகவும், அமைதியாகவும் இருந்தாரு. இரண்டாவது நாள் என்கிட்டே வந்து, ஒரு பெண்ணோட பேர சொல்லி, இவங்களுக்காக இன்னைக்கு செபம் பண்ணிக்க முடியுமான்னு கேட்டாரு… கண்டிப்பா பண்றேன் ஆனா ஏதாவது குறிப்பிட்ட கருத்து இருக்கான்னு கேட்டப்போ அவருடைய கண்ணு கலங்கிடுச்சி. என்னப்பா என்ன ஆச்சுன்னு கேட்டதும் சொன்னாரு – அது தான் நேசிச்ச பொண்ணுன்னு. சரி இப்போ என்ன செபத்துக்கான சிறப்பு அவசியம்னு கேட்டப்போ சொன்னாரு - இன்னைக்கு அவங்களுக்கு கல்யாணம். அதைத் தவிர்க்கவும், மறக்கவும்தான் நான் தியானத்துக்கே வந்தேன்.

எனக்கு அந்த தம்பிய ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது… ஏன் பா… ஏன் பிரிஞ்சிங்கன்னு கேட்டேன். அவங்க அம்மா அப்பா பார்த்த மாப்பிள்ளையவிட இவரு சம்பளம் ரொம்ப குறைவுன்னு அந்த பொண்ணு இவரை விட்டுட்டு போயிட்டங்களாம்… கூடவே அம்மா அப்பாவோட விருப்பம்தான் தனக்கு முக்கியம்னு சொல்லிட்டு போயிட்டங்களாம். சரி… உனக்கு கோபமா இல்லையான்னு கேட்டேன்… கோபப்பட்டு, கட்டாயப்படுத்தி வர்றது உண்மையான அன்பு இல்ல, அது மாதிரியான அன்பு எனக்கு வேண்டாம். நான் அவங்கள உண்மையா அன்பு செஞ்சேன், இப்பவும் அன்பு செய்றேன். ஆனா அவங்களுக்கு என் மேல அன்பு இல்ல அதுக்கு நான் ஏதும் செய்ய முடியாது. அவங்களுக்காக அவங்க திருமண வாழ்க்கைக்காக நான் செபிக்கணும்னு எனக்கு தோணுது அதான் உங்க கிட்ட கேட்டேன்னு சொன்னாரு… அந்த இளைஞன் உண்மையிலேயே கிறிஸ்தவன்… அன்புனா என்னன்னு எவ்வளவு அழகா புரிஞ்சி வெச்சிருக்காரு!

சிந்தனைக்கு...

ஏன் இன்று நட்புகளும், மற்ற பல உறவுகளும் மிகவும் எளிதாய் முறிந்துவிடுகின்றன? காரணங்களை சற்று ஆராய்ந்து பார்த்தால், அடிப்படையில் எதிர்பார்ப்புகள் அதிகம். சராசரி மனிதரான ஒவ்வொருவரும் எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நட்பிலும் உறவிலும் தருவதும் பெறுவதும் இயல்பே. ஆனால், ஒரு சிலர் பெறுவதையே முதன்மைபடுத்திவிட்டால், வாழ்வில் வெற்றியை மட்டுமே பெறவிரும்பினால், எதார்த்த வாழ்விற்கு மாறாக கனவுலகிலே உல்லாசமாயிருக்கப் பழகிவிட்டால், குறைகளற்ற, நிறைகளே நிறைந்த ஒரு நபரை நண்பராக, வாழ்க்கைத் தோழனாக அடைய விரும்பினால், ஏமாற்றமடைய வாய்ப்புகள் அதிகம். அதிலும், தான் மற்றவருக்குத் தருவதை முதன்மைப்படுத்தாமல், மற்றவரிடமிருந்து பெறக்கூடியதை முன்னிறுத்துவது கிறிஸ்தவ விழுமியங்களுக்கு எதிரானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சகமனிதருக்கு முதன்மையான இடம் கொடாமல், அவரிடமிருக்கும், செல்வம், பணம், வசதி, வாய்ப்பு, வெற்றி, புகழ், வெளித்தோற்றம், இவற்றையெல்லாம் முதன்மைப்படுத்தி இவற்றிலே சரிவு ஏற்படும்பொழுது உறவுகளிலே சஞ்சலங்களை ஏற்படுத்துவது, உறவுகளை துண்டிப்பது போன்றவை இன்று நம்மிடையே காணப்படும் முறையற்ற, சரியற்ற தரநிலைகள். அவை உறவுகளை உண்மையற்றவையாய் அர்த்தமற்றவையாய் மாற்றிக் கொண்டிருக்கின்றன.

எதார்த்தம்...

இன்னைக்கு உறவுகள் கூட லாப நஷ்ட கணக்குப்படி தான் நடக்குது. நீங்களே சொல்லுங்க இது உண்மையா இல்லையா?

ஒரு சூழல்ல நாம முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தா நாம முதல்ல யோசிக்கிறது என்ன – எது எனக்கு சாதகமா இருக்கும் எது எதிரா இருக்கும், எதுல அதிக லாபம் எதுல அதிக இழப்பு, எத சொன்னா செஞ்சா நான் ஒரு படி உயரலாம், என்ன முடிவெடுத்தா அதிகம் பேரு என்னோட இருப்பாங்க… இப்படிப்பட்ட கணக்குகள அல்லது… எது சரி எது தவறு, எது முறை எது கடவுளுக்கு உகந்தது, எது மனிதாபிமானம், எது நல்லது, எது புனிதமானது இப்படிப்பட்ட எண்ணங்களா?

ஒரு பொருள் தனக்கு வேணும்னு நினைக்கிற மாதிரியே இன்னைக்கு இந்த நபர் எனக்கு வேணும்னு சிந்திக்கிறவங்க அதிகமாகிட்டாங்க. ஒரு பொருளை தங்களோட வசதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பயன்படுத்துற மாதிரியே மனிதர்களையும் பயன்படுத்தரவுங்க அதிகமாகிட்டே வராங்க.

அளவுக்கு அதிகமாக பொருட்கள் மேல சார்ந்து இருப்பதே தப்புன்னு சொன்னா, மனிதர்களையே பொருட்களா பயன்படுத்தறத நாம என்ன சொல்றது? காதலிக்காத ஒருத்தர கட்டாயப்படுத்துறது, அவங்கள காயப்படுத்துறது, சில நேரங்கள்ல கொலை பண்ற கொடுமைகள் எல்லாம் இன்னைக்கு நடந்துக்கிட்டு இருக்கா இல்லையா?

கொலை, கொள்ளை கற்பழிப்புன்னு இது எல்லாமே மனிதை மனிதரா மதிக்காத நேசிக்காத ஒரு நிலை… இத நாம நிறுத்தியே ஆகணும்!

சிந்தனைக்கு..

படைப்பிலே உச்சக்கட்டப் படைப்பாய், தன் உள்ளத்தையும், உடலையும் தனித்தாளும் திறமைபெற்றவனாய் மனிதன் படைக்கப்பட்டான். அன்பின் சின்னமாய், கடவுளின் அன்பைத் தரவும், பெறவும், அதை இரட்டிக்கவும் படைக்கப்பட்டான். சமுதாயத்தை கட்டியெழுப்பவும் பணிக்கப்பட்டான். வளர்ச்சியின் அடையாளம் மனிதன். பலுகிப் பெருக கடவுளின் ஆசியையும், மனித ஆற்றலையும் பெற்றவன் மனிதன். படைப்பிலே இணை-உருவாக்கினனாகவும், மனித இனத்தையும், அவன் சார்ந்து வாழ்கின்ற மற்றனைத்தையும் அழியாமல் பாதுகாக்கின்றவனாகவும் படைக்கப்பட்டவன் மனிதன். ஆனால், இன்று தனது பாலியல் பரிமாணத்தை வெறும் புணர்வுப் பொருளாய் மாற்றி, பாலியல் வன்புணர்வு, ஆபாச உணர்வுகள், ஆபாச ஊடகங்கள், குழந்தைகளின் சீரழிப்பு எனத் தொடங்கி, பொதுவாழ்வில் சமுதாய சுரண்டல், ஊழல் செய்து, ஏழை எளியவரை நசுக்கி, ஏமாற்றி பொருள் சேர்த்து, சமநிலையை, சமத்துவத்தைப் பேணிக்காத்த சமுதாயத்தில் படிநிலைகளை உருவாக்கி சாதியத்தால் மனிதர்களைப் பிரித்து, கடவுளின் பெயரால் பிளவுகளை உண்டாக்கி, சமய அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி, வன்முறை, தீவிரவாதம் இவற்றின் பெயரால் மற்றவர்களைக் கொன்று குவிக்கிறான். மனிதரும், மனித வாழ்வும் இன்று வெறும் பொருளாய் மதிக்கப்படுவதால், மனிதர்களையும் பயன்படுத்தி தூக்கி எறிந்துவிடும் கலாச்சாரம் இன்று வேறூன்றிக்கொண்டிருக்கிறது. பொருட்கள் பயன்படுத்தப் படவேண்டும், மனிதர்கள் அன்பு செய்யப்பட வேண்டும்.

முடிவு...

அன்பிற்கினிய இளைய சமுதாயமே! பொருட்களையும், சுகங்களையும் மட்டுமே முன்னிறுத்தி, மையப்படுத்தி வாழுகின்ற மிருகத்தனமான கலாச்சாரத்தை நீ அடையாளம் காணவேண்டும், கேள்விக்குள்ளாக்கவேண்டும், மாற்றி ஆகவேண்டும். உன்னிலிருந்து நீ தொடங்கு. உண்மையான அன்பினால் அடுத்தவரோடு உறவுகொள். பொருட்களை பயன்படுத்து, மனிதரை அன்பு செய்.  

15 October 2018, 15:24