தேடுதல்

பத்திரிகையாளர் கூட்டத்தில் ஆயர் மாமன்ற நடவடிக்கை விவரம் 15.10.2018 பத்திரிகையாளர் கூட்டத்தில் ஆயர் மாமன்ற நடவடிக்கை விவரம் 15.10.2018 

இளையோர் மீது புனிதர் ஆறாம் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை

இன்றைய உலகின் துன்பங்கள் முன்னால், இளையோர் மனத்தளர்வு அடையாதிருக்க அவர்களுக்கு அருகிருந்து ஊக்கமளிக்க வேண்டியது திரு அவையின் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

விசுவாசம் என்பது ஒரு வீர தீரச் செயல், ஆகவே, இளையோரின் முன்னோக்கியப் பாதையில் உடனிருந்து ஊக்கமளிக்க வேண்டியது திருஅவையின் கடமையாகிறது என்பது இத்திங்களன்று நடந்த உலக ஆயர் மாமன்ற கூட்டத்தின் மையப்பொருளாக இருந்தது.

ஆயர் மாமன்றத் தந்தையர்கள் 14 குழுக்களாக பிரிக்கப்பட்டு, குழு ஆலோசனைகள் துவக்கப்படுவதற்கு முன்னர், இக்கருத்து, ஒரு வழிகாட்டியாக முன்வைக்கப்பட்டது.

ஒவ்வொருவரும் தங்களை மகிழ்ச்சியுடன் வழங்கி, இவ்வுலகுக்கும் மனித குலத்திற்கும் பணியாற்ற இறைவனிடமிருந்து அழைப்புப் பெற்றுள்ளார்கள் என்பதை வலியுறுத்திய ஆயர் மாமன்றத் தந்தையர்கள், இத்தகைய இளையோர், இவ்வுலகின் வேதனைகள் மற்றும் மரணம் போன்றவற்றின் மத்தியில், தாங்கள் கைவிடப்பட்டவர்களாக உணராதிருக்க, உடன் நின்று ஊக்கமளிக்கவேண்டியது, திரு அவையின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டினர்.

இயேசு கிறிஸ்துவுக்கும், இளையோருக்கும், இடையே உறவை ஆழப்படுத்துதல், விசுவாசம் குறித்த ஆழமான அறிவை ஊட்டுதல், உடன்பிறந்த உணர்வில் கிட்டும் மகிழ்வை உணர வைத்தல், செபத்தின் சுவையை அறிமுகப்படுத்தல், நற்செய்தி வாழ்வுக்கு சாட்சியாக இருப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுதல் போன்றவைகளில் திருஅவை அதிகாரிகளின் கடமையும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இளையோர் மீது, புதிய புனிதர் திருத்தந்தை ஆறாம் பவுல் கொண்டிருந்த நம்பிக்கையும், நவீன உலகோடு அவரின் கருத்துப் பரிமாற்றங்களும் இன்றைய தலைவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு எனவும், ஆயர் மாமன்றத் தந்தையர்கள் மேலும் கூறினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2018, 17:08