தேடுதல்

Vatican News
ஆயர் மாமன்றத்தில் திருத்தந்தை ஆயர் மாமன்றத்தில் திருத்தந்தை  (AFP or licensors)

கத்தோலிக்க வலைத்தளங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் தேவை

நவீன கால தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, இளையோரை ஒன்றிணைத்து, நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியதன் தேவை வலியுறுத்தப்பட்டது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இளையோர் ஒவ்வொருவரும், கணனி வலைதளத்தில், கிறிஸ்தவ இருப்பின் முக்கிய கதாபாத்திரமாகச் செயல்பட வேண்டும் என, இவ்வெள்ளிக்கிழமையன்று ஆயர் மாமன்ற அமர்வில் விவாதிக்கப்பட்டதாக, பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறப்பட்டது.

கணனி வலைத்தளம் வழியாக இளையோரை நெருங்குவதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, அதற்கென வலைத்தள அலுவலகம் ஒன்று வத்திக்கானில் நிறுவப்பட வேண்டும் என, வெள்ளியன்று நடைபெற்ற ஆயர் மாமன்றக் கூட்டத்தில் அழைப்பு விடப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்களுடன் உரையாடிய லெபனான் நாட்டு ஆயர் Joseph Naffah அவர்கள் கூறினார்.

லெபனானிலிருந்து வெளியேறி, பல்வேறு நாடுகளில் வாழும் அந்நாட்டு இளையோரை, வலைத்தளம் வழியாக ஒன்றிணைக்க, தலத்திருஅவையால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்ட அலுவலகம், இதற்கு ஒரு முன்னோடியாக இருக்கலாம் என்றார் ஆயர் Naffah.

கத்தோலிக்க நிலைப்பாடுகளை வலியுறுத்தும் பல்வேறு வலைத்தளங்களங்கள் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றை ஒருங்கிணைக்கும் அலுவலகம், வத்திக்கானில் திறக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும், ஆயர் Naffah அவர்கள், திருத்தந்தையிடம் முன்வைத்தார்.

டிஜிட்டல் கணனி உலகில் உள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, நற்செய்தி அறிவிப்புப் பணியை வலைத்தளங்கள் வழியே எடுத்துச் செல்ல இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய காலம் இது என São Paulo கழகத்தின் அதிபர், அருள்பணி Valdir José De Castro பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

விவிலிய மறைப்பணிகளை இளையோருக்கு கொண்டு செல்ல, டிஜிட்டல் கணனி உலகை பயன்படுத்த வேண்டிய தேவை குறித்து கானா நாட்டு ஆயர் Emmanuel Kofi Fianu அவர்கள் விளக்கமளித்தார்.

இதே பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கருத்துக்களை முன்வைத்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆய்வாளரும், குடிபெயர்வோர் மத்தியில் பணிபுரிவோருமான, Yadira Vieyra அவர்கள், இளம் வயதிலேயே குடிபெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

20 October 2018, 15:33