தேடுதல்

Vatican News
அக்டோபர் 20 சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம் அக்டோபர் 20 சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம் 

திருஅவையின் வெளிப்படைத் தன்மை எதிர்பார்க்கப்படுகின்றது

ஆயர் மாமன்றத்தில் இளையோரின் குரல்களுக்கு செவிமடுப்பதன் வழியாக பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இளையோரிடம் நாம் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்ப்பதுபோல், சிறார் பாலியல் முறைகேடுகள் குறித்தவற்றில் திருஅவையும் தன் பொறுப்புணர்வுகளை ஏற்று, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படவேண்டும் என்ற கருத்து, ஆயர் மாமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக உரைத்தார், அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால், Blase Joseph Cupich.

ஆயர் மாமன்றக் கூட்டத்திற்கென உருவாக்கப்பட்ட Instrumentum Laboris என்ற வழிகாட்டுதல் ஏட்டின் 3ம் பிரிவு குறித்த விவாதங்கள் முடிந்துள்ள நிலையில், சனிக்கிழமை மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய சிக்காகோ பேராயர், கர்தினால் Cupich அவர்கள், சிறார் பாலியல் முறைகேடுகள் குறித்து விவாதித்து செயல் முடிவெடுக்க, வரும் பிப்ரவரியில், உலக ஆயர்களின் பிரதிநிதிகள் வத்திக்கானுக்கு வரவிருப்பதையும் எடுத்துரைத்தார்.

இளையோரின் குரல்களுக்கு இந்த மாமன்றக் கூட்டத்தில் செவிமடுப்பது, பல விடயங்கள் குறித்த உண்மை நிலைகளைத் தெளிவாக்குகிறது என்று கூறிய பாப்புவா நியூ கினி கர்தினால் ஜான் ரிபாட் (John Ribat) அவர்கள், புலம் பெயரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, ஏழ்மை, வேலைவாய்ப்பற்ற நிலைகள் போன்றவை முதலில் அகற்றப்பட வேண்டும் என உரைத்தார்.

இதே பத்திரிகையாளர் கூட்டத்தில் உரையாற்றிய சுவிட்சர்லாந்து ஆயர் Alain de Raemy அவர்கள், திருஅவைக்குள் அனைவரும் வரவேற்கப்பட்டவர்களாக உணரவேண்டும், இயேசுவுடன் இணைந்து செல்லும்போது நம் பாதை எப்போதும் இயலக்கூடியதே எனவும் கூறினார்.

22 October 2018, 17:10