தேடுதல்

Vatican News
2018.10.17 briefing sinodo giovani 2018.10.17 briefing sinodo giovani 

நவீன கேள்விகளுக்கு விவிலியத்தில் விடை தேடுதல்

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தால், ஏழ்மையும், குடிபெயர்தலும் அதிகரித்து வருகின்றன என்கின்றனர், ஆயர் மாமன்றத் தந்தையர்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இப்பூமி மற்றும் ஏழைகளின் அழுகுரல்களை எவரும் புறக்கணிக்க முடியாது என்பதால், சுற்றுச்சூழலை பாதுகாத்து, வருங்காலத் தலைமுறையினரிடம்  ஒப்படைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என, ஆயர் மாமன்றத்தின் புதன் மாலை அமர்வில், அதாவது, 15வது பொது அமர்வில் எடுத்துரைக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் குறித்துக் கவலைப்படாமல் மனித குலம் வாழ்வது, ஏழ்மை அதிகரிப்புக்கு காரணமாகிறது என்பதையும் இவ்வமர்வில் சுட்டிக்காட்டிய ஆயர்கள், நிலத்தைச் சுரண்டும் உலக நிறுவனங்களால், சுற்றுச்சூழல் அழிவதுடன், மக்கள் குடிபெயரவும் காரணமாகிறது என்ற கவலையையும் வெளியிட்டனர்.

இன்றைய உலகின் வேலைவாய்ப்புக்கள் குறித்தும் எடுத்துரைத்த ஆயர்கள், எந்த ஒரு வேலையும் படைப்பாற்றலுடன் கூடியதாக இருக்கும்போதுதான், அது, தொழிலாளிக்கு மன நிறைவைத் தருவதாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இன்றைய இளைய சமுதாயத்தின் பல கேள்விகளுக்கு விடைகளைக் கொண்டிருக்கும் விவிலியத்தை வாசிக்க, இளைஞர்களுக்கு ஊக்கமூட்ட வேண்டிய அவசியத்தையும் இந்த அமர்வின்போது வலியுறுத்தினர் ஆயர்கள்.

திருஅவையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்துள்ள இன்றையச் சூழலில், திருஅவை தன் கடந்த காலத் தவறுகளை ஏற்று, அதன் கட்டமைப்புகளைப் புதுப்பிக்கவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினர், ஆயர் மாமன்றத் தந்தையர்.

மதங்களிடையே நிலவும் கருத்துப் பரிமாற்றங்கள், மறைக்கல்வி புதுப்பித்தல், கத்தோலிக்க பள்ளிகளின் முக்கியத்துவம், இளையோர் தினங்கள் போன்றவை குறித்தும், 15வது பொது அமர்வில், கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்றன.

18 October 2018, 12:46