தேடுதல்

உலக ஆயர்கள் மாமன்றத்தைப் பற்றி விளக்கும் செய்தியாளர்கள் கூட்டம் உலக ஆயர்கள் மாமன்றத்தைப் பற்றி விளக்கும் செய்தியாளர்கள் கூட்டம் 

அரண்மனை வாழ்வைவிட்டு, மக்களுடன் இணையும் திருஅவை

தான் இதுவரை பயன்படுத்தி வந்துள்ள பாரம்பரிய மொழிக்குப் பதிலாக, இளையோர் புரிந்துகொள்ளும் வகையில் மற்றொரு மொழியைக் கண்டுபிடிக்கவேண்டிய தேவை திருஅவைக்கு உள்ளது - கர்தினால் சாக்கோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இதுவரை கத்தோலிக்கத் திருஅவை பயன்படுத்தி வந்துள்ள பாரம்பரிய மொழிக்குப் பதிலாக, இளையோர் புரிந்துகொள்ளும் வகையில் மற்றொரு மொழியைக் கண்டுபிடிக்கவேண்டிய தேவை உள்ளது என்று கர்தினால் லூயிஸ் ரஃபேல் சாக்கோ அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்றுவரும் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் சாக்கோ அவர்கள், அக்டோபர் 16ம் தேதி மாமன்றத்தில் நிகழ்ந்தவற்றை, செய்தியாளர்கள் கூட்டத்தில் தொகுத்து வழங்கிய வேளையில், திருஅவை, தன் அரண்மனை வாழ்வைவிட்டு, மக்களுடன் இணைய வந்திருப்பது ஒரு நேர்மறையான மாற்றம் என்று கூறினார்.

சிரியாவில் நடைபெற்றுவரும் போரைக் குறித்துப் பேசிய முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள், அங்குள்ள இளையோர், நாட்டைவிட்டு வெளியேறாமல், அவர்களைப் பாதுகாத்து, தகுந்த கல்வியும், வேலை வாய்ப்பும், எதிர்காலமும் அவர்களுக்கு உருவாக்கித் தருவது, தலத்திருஅவைக்கு முன் உள்ள பெரும் சவால் என்று குறிப்பிட்டார்.

நாம் பயன்படுத்தும் கருவிகளுக்கும், பின்பற்றும் பயிற்சிகளுக்கும் கையேடுகள் இருப்பதுபோல், வாழ்வு என்ற பயிற்சிக்குத் தேவையான கையேட்டை உருவாக்குவது, ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு முக்கியப் பணி என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

தென் அமெரிக்காவின் இளையோர் சந்திக்கும் மிகப் பெரிய சவால் போதைப்பொருள் பயன்பாடு என்பதை, செய்தியாளர்களிடம் வருத்தத்தோடு கூறிய, பிரேசில் நாட்டு பேராயர் ஹைமே ஸ்பெங்லர் அவர்கள், இந்த இருளான குகையிலிருந்து இளையோரை மீட்பது, பிரேசில் மற்றும் தென் அமெரிக்க தலத்திருஅவைகள் பலவற்றின் முக்கிய பணி என்று கூறினார்.

அதிகாரத்துவம் என்ற கருத்தை முன்னிறுத்தாமல், இறைமக்கள் என்ற கருத்தை முன்னிறுத்தும் திருஅவை இன்றைய உலகில் தேவை என்று கூறிய அருள் சகோதரி லுயிஸா கொன்சாலஸ் அவர்கள், திருஅவையில் இதுவரை நிலவி வந்துள்ள மறைமுகமான அவலங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, திருஅவையை கறைகளிலிருந்து நீக்கும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.

பங்குகள், மறைமாவட்டங்கள், நாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி, இளையோர், தொடர்புகளை உருவாக்கும் வகையில், புதிய மாற்றங்களை திருஅவை, இந்த மாமன்றத்தின் உதவியுடன் கண்டுபிடிக்க வேண்டும் என்று, தகவல் தொடர்பு திருப்பீட அவையின் தலைவர் பவுலோ ருபீனி அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2018, 16:56