தேடுதல்

அக்டோபர் 11 செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள் அக்டோபர் 11 செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள் 

ஆயர்களுக்கும், இளையோருக்கும் - தலைமுறை இடைவெளி

ஆயர்களுக்கும், இளையோருக்கும் இடையே நிகழ்ந்துவரும் மாமன்ற பகிர்வுகள், பல சவால்களை வெளிக்கொணர்ந்தாலும், அவை, மகிழ்வான, அமைதியான முறையில் இடம்பெறுகின்றன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 11, இவ்வியாழனன்று நடைபெற்ற ஆயர்கள் மாமன்ற அமர்வுகளில், டிஜிட்டல் உலகம், அச்சம் மற்றும் தனிமை, கொரிய தீபகற்பம் ஆகிய முக்கிய கருத்துக்களில் பகிர்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று, இவ்வியாழன் மதியம் நிகழ்ந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறப்பட்டது.

இத்தாலிய பேராயர்களில் ஒருவரான ப்ரூனோ ஃபோர்த்தே, கொரிய ஆயர்களில் ஒருவரான லஸ்ஸாரோ யு ஹுங்-சிக் மற்றும் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டுள்ள இளையோரில் ஒருவரான பெர்சிவால் ஹோல்ட் ஆகிய மூவரும் மாமன்ற நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களிடம் விவரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

செய்தியாளர்கள் கூட்டத்தின் துவக்கத்தில், தகவல் தொடர்பு திருப்பீட அவையின் தலைவர், பவுலோ ருஃபீனி அவர்கள் பேசுகையில், ஆயர்களுக்கும், இளையோருக்கும் இடையே நிகழ்ந்துவரும் மாமன்ற பகிர்வுகள், பல சவால்களை வெளிக்கொணர்ந்தாலும், அவை, மகிழ்வான, அமைதியான முறையில் இடம்பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இளையோரின் டிஜிட்டல் உலகம்

டிஜிட்டல் உலகம் பெரும் முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், அவ்வுலகில் பகிர்ந்துகொள்ளப்படும் துரிதமானத் தகவல்களை, சரிவர புரிந்துகொண்டு, தேவையானவற்றை மட்டும் உள்வாங்கும் பக்குவத்தை, இளையோர் கற்றுக்கொள்வதற்கு, திருஅவை உதவிகள் செய்யவேண்டும் என்ற கருத்து பேசப்பட்டது என்று ருஃபீனி அவர்கள் எடுத்துரைத்தார்.

தனிமையும் அச்சமும்

டிஜிட்டல் உலகில் சிக்கிக்கொண்டிருக்கும் பல இளையோர், கணணிக்கு முன் தனிமையில் அமர்ந்திருப்பதையும், கணணியில் காண்பவை அச்சமூட்டுவதையும் மாமன்ற அமர்வில் பகிர்ந்துகொண்டனர் என்று, பேராயர் ஃபோர்த்தே அவர்கள் கூறினார்.

அரசியல், மற்றும், பொருளாதார சிக்கல்களிலிருந்து வெளியேறி, நல்லதொரு வாழவைத் தேடும் இளையோரிடம் காணப்படும் நம்பிக்கையும், மேற்கத்திய நாடுகளில், தொழில் நுட்பங்களால் சூழப்பட்டுள்ள இளையோரிடம் வெளிப்படும் தனிமையும், அச்சமும், இளையோர் உலகை பிரித்துக்காட்டும் இருவேறு உருவகங்கள் என்று, பேராயர் ஃபோர்த்தே அவர்கள் மேலும் கூறினார்.

கொரிய தீபகற்பத்தில் அமைதி முயற்சிகள்

தென் கொரியாவின் ஆயர் ஹுங்-சிக் அவர்கள் பேசுகையில், சென்ற ஆண்டுவரை, கொரிய தீபகற்பத்தில் போர் ஒன்று ஆரம்பமாகும் அச்சமே உலகெங்கும் பரவியிருந்தது என்றும், தற்போது அங்கு உருவாகிவரும் ஒன்றிப்பு முயற்சிகள், நம்பிக்கை தருகின்றன என்றும் கூறினார்.

தென் கொரிய அரசுத்தலைவர், விரைவில் திருத்தந்தையை சந்திக்கவிருப்பது நம்பிக்கை தரும் ஒரு நிகழ்வு எனினும், இவ்விரு நாடுகளில் அமைதியைக் கொணர பெருமளவு பணிகள் தொடரவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

இந்திய இளைஞர் பெர்சிவால் ஹோல்ட் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆயர்களுக்கும் இளையோருக்கும் இடையே தலைமுறை இடைவெளி நிலவுவதால், தொடர்புகள் தடைபடுகின்றன என்றும், இந்த சவாலை எதிர்கொள்ள இரு தரப்பினரும் உரையாடல் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2018, 15:48