உலக ஆயர்கள் மாமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் இளையோர் உலக ஆயர்கள் மாமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் இளையோர் 

திருத்தந்தையை ஈராக் நாட்டுக்கு அழைத்த இளையவர்

திருத்தந்தை, தங்கள் நாட்டுக்கு வந்து, அங்கு நிலவும் அவலங்களை நேரில் காணவேண்டும் என்று ஈராக் நாட்டு இளையவர் அழைப்பு விடுத்தது, மாமன்றத்தினர் மனதைத் தொட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வியாழன் பிற்பகல் நிகழ்ந்த மாமன்ற அமர்வில், ஈராக் நாட்டிலிருந்து அழைப்பு பெற்றிருந்த ஓர் இளையவர் பகிர்ந்துகொண்ட எண்ணங்களும், திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு வந்து, அங்கு நிலவும் அவலங்களை நேரில் காணவேண்டும் என்று அவர் விடுத்த அழைப்பும், மாமன்ற உறுப்பினர்களை பெரிதும் பாதித்தன என்று, அக்டோபர் 11ம் தேதி நிகழ்ந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறப்பட்டது.

ஈராக் நாட்டில் கிறிஸ்தவர்களின் நிலை மிகவும் கடினமாக உள்ளது என்றும், இந்நிலையில், தங்கள் நாடும், மத்தியக்கிழக்கு பகுதி முழுவதும் கிறிஸ்தவர்களை இழந்துவிடும் ஆபத்து அதிகம் என்றும் இளையவர் கூறியது, மாமன்றத்தின் உறுப்பினர்களிடம் பாதிப்பை உருவாக்கியது என்று கூறப்பட்டது.

இந்தப் பகிர்வைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் மத அடிப்படைவாதம், ஊழல் ஆகியவற்றைக் குறித்து மாமன்றத் தந்தையர் தங்கள் கவலைகளை வெளியிட்டனர் என்றும், இத்தகையைச் சூழல், இளையோரிடையே நம்பிக்கையைக் குறித்து வருகின்றது என்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

பல்வேறு அநீதிகள், சமுதாயப் பாகுபாடுகள் குறித்து, இளையோர், தங்கள் உணர்வுகளை, இந்த அமர்வில் வெளிப்படுத்திய வேளையில், பெண்களுக்கு கூடுதல் பங்களிப்பு வழங்குவதில், திருஅவை இன்னும் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வெகுவாக வலியுறுத்தப்பட்டது என்று, செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறப்பட்டது.

இவ்வியாழன் பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு சபைகளின் பிரதிநிதிகள் ஒரு சிலர், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட வேளையில், கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற இலக்கு, இவ்வுலகிற்கு நாம் வழங்கக்கூடிய பெரும் சாட்சியமாக இருக்கும் என்ற கருத்து வெளியானது என்று கூறப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2018, 15:52