15வது ஆயர்கள் மாமன்றம் குறித்த செய்தியாளர்கள் கூட்டம் - அக்டோபர் 10 15வது ஆயர்கள் மாமன்றம் குறித்த செய்தியாளர்கள் கூட்டம் - அக்டோபர் 10 

திருமண வாழ்வும், துறவற வாழ்வும் அழைப்புகளே

இளையோர், சரியான முடிவுகள் எடுக்க உதவும் வழிமுறையான, தெளிந்து தேர்தலை, அவர்களுக்குச் சொல்லித் தர, திருஅவை கடமைப்பட்டுள்ளது - மாமன்றத் தந்தையர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அசிசி நகர் புனித பிரான்சிஸ், தன் 23வது வயதில், "இறைவா, நான் என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்?" என்று கேட்டபோது, "இறைவனின் இல்லத்தை சீராக்கு" என்று அவருக்குக் கிடைத்த அழைப்பு, இன்று, பல இளையோருக்கு, பல வழிகளில் கிடைக்கிறது என்ற கருத்து, உலக இளையோர் மாமன்றத்தின் 7வது அமர்வில் பேசப்பட்டது என்று, செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறப்பட்டது.

அக்டோபர் 10ம் தேதி புதன் காலை அமர்வில் பேசப்பட்ட கருத்துக்களை, மாமன்றப் பிரதிநிதிகள், செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டவேளையில், இளையோருடன் இணைந்து செல்லுதல் என்பது, இந்த அமர்வில் வெளிப்பட்ட முக்கிய கருத்து என்று, கூறினர்.

திருமண வாழ்வும், துறவற வாழ்வும், ஒரே திருமுழுக்கிலிருந்து உருவாகும் இருவேறு அழைப்புகள் என்றும், இறையரசிற்கு அழைத்துச் செல்வதில் இவ்விரு அழைப்புகளுமே முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் இந்த அமர்வில் பேசப்பட்டது.

இளையோர், தங்களுக்குத் தேவையான முடிவுகளை, தாங்களே எடுக்க விழைவதாலும், தங்கள் முடிவுகளில், வயதில் முதிர்ந்தோர் தலையிடுவதை விரும்பாததாலும், இளையோர், சரியான முடிவுகள் எடுக்க உதவும் வழிமுறையான தெளிந்து தேர்தலை, அவர்களுக்குச் சொல்லித் தர, திருஅவை கடமைப்பட்டுள்ளது என்று, மாமன்றத் தந்தையர் கூறினர்.

15வது உலக மாமன்றத்தின் இறுதி முடிவுகளைத் தொகுக்கும் பொறுப்பிற்கு, தெரிவு செய்யப்பட்டுள்ள 12 உறுப்பினரின் பெயர்கள் இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இவர்களில், ஆசிய கண்டத்தின் சார்பாக, கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2018, 15:19