தேடுதல்

ஆயர்கள் மாமன்றம் குறித்து அக்டோபர் 10ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம் ஆயர்கள் மாமன்றம் குறித்து அக்டோபர் 10ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம் 

ஆயர்கள் மாமன்றத்தின் 8வது அமர்வு குறித்த விவரங்கள்

எதிர்காலமான இளையோர் மீது நம்பிக்கை கொண்டு பேசவேண்டும் என்ற கருத்து, 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 8வது அமர்வில் வெளிவந்தது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'திருஅவையும் இளையோரும்' என்று பேசும்போது, கத்தோலிக்கத் திருஅவையின் எதிர்காலமான இளையோர் மீது நம்பிக்கை கொண்டு பேசவேண்டும் என்ற கருத்து, 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 8வது அமர்வில் வெளிவந்தது என்று, செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறப்பட்டது.

நடைபெற்றுவரும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் அக்டோபர் 10ம் தேதி நடைபெற்ற அமர்வுகளின் தொகுப்பை செய்தியாளர்களுக்கு வழங்கும் கூட்டத்தில், மெக்சிகோ பேராயர், கர்தினால் Carlos Aguiar Retes, லக்ஸம்பர்க் பேராயர், Jean-Claude Hollerich, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வருகை தந்துள்ள இளம்பெண், Briana Regina Santiago ஆகியோர் பங்கேற்றனர்.

இளையோர் பெறும் அழைப்பு, ஏட்டளவில் பகிர்ந்துகொள்ளப்படும் கருத்துக்களில் இருந்து உருவாவது கிடையாது, மாறாக, அது, ஒவ்வொரு நாள் வாழ்விலும் பெறும் அனுபவங்களின் வழியே உருவாகிறது என்பதை, மாமன்றத் தந்தையர் கூறினர் என்று இக்கூட்டத்தில் கூறப்பட்டது.

அழைத்தல்களுக்கு அடித்தளமாக அமைவது குடும்பங்களே என்ற கருத்து, மாமன்றத்தின் 8வது அமர்வில் வலியுறுத்திக் கூறப்பட்டது என்றும், எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரங்கள் அனைத்தும், அழைப்பை அவர்கள் உள்ளங்களில் விதைக்கும் வாய்ப்புக்கள் என்றும், மாமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

திருஅவையில் காணப்படும் அழைப்பின் ஒரு முக்கிய அம்சமாக விளங்குவது, வறியோர் மீது நாம் காட்டும் அக்கறை என்பதையும், எனவே, வாய்ப்பிழந்த, வறுமைப்பட்ட இளையோருடன் திருஅவை இன்னும் தீவிரமான தொடர்புகளை உருவாக்குவது முக்கியம் என்பதையும் மாமன்ற தந்தையர் எடுத்துரைத்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2018, 15:11