ஆயர்கள் மாமன்றம் குறித்த செய்தியாளர்கள் கூட்டம் ஆயர்கள் மாமன்றம் குறித்த செய்தியாளர்கள் கூட்டம் 

அக்டோபர் 9ம் தேதி, மாமன்ற நிகழ்வுகள் குறித்த அறிக்கை

தங்கள் கருத்துக்களுக்குச் செவிமடுக்கும்படி கேட்கும் இளையோர், திருஅவையின் வாழ்விலும், வளர்ச்சியிலும் தாங்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளனர் – கர்தினால் கிரேசியஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தாங்கள் சொல்வதை கவனமுடன் கேட்கும்படியும், தாங்கள் கூறும் கருத்துக்களுக்கு தகுந்த முக்கியத்துவம் கொடுக்கும்படியும், அதேவேளையில், தவறுகள் செய்வதற்கு தங்களுக்கு அனுமதி வழங்கும்படியும் இளையோர் கேட்கின்றனர் என்று, திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் கர்தினால்கள் குழுவின் ஓர் உறுப்பினரான கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

அக்டோபர் 9 செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டோர்

வத்திக்கானில் நடைபெற்றுவரும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில், அக்டோபர் 9, இச்செவ்வாயன்று நிகழ்ந்தவற்றை தொகுத்து வழங்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில், கர்தினால் கிரேசியஸ் அவர்களுடன், மடகாஸ்கர் கர்தினால் Désiré Tsarahazana, கானடா கர்தினால் Gérald Cyprien Lacroix, திருப்பீட தகவல் தொடர்புத்துறை தலைவர் பவுலோ ருஃபீனி, திருப்பீட செய்தித் துறையின் தலைவர் கிரெக் புர்க்கே, மற்றும் அருள்சகோதரி Nathalie Becquart ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆயர்கள் மாமன்றத்தில் பயன்படுத்தப்படும் வழிகாட்டியாக உருவாக்கப்பட்ட Instrumentum laboris கையேட்டில் கூறப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களை மையப்படுத்தி, குழுக்களில் பகிர்வுகள் நடைபெற்றன என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறப்பட்டது.

பொருளுள்ள, அழகான வடிவங்களில் திருவழிபாடுகள்

தங்கள் கருத்துக்களுக்குச் செவிமடுக்கும்படியும், திருஅவையின் வாழ்விலும், வளர்ச்சியிலும் தாங்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள விழைவதாகவும், திருவழிபாடுகள், இன்னும் பொருளுள்ள, அழகான வடிவங்களில் இறைவனின் வார்த்தையை தங்களுக்கு உரைக்கவேண்டும் என்றும், இளையோர், குழுப் பகிர்வுகளில் கூறினர் என்று, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

2019ம் ஆண்டு, மடகாஸ்கரில் திருத்தந்தையின் பயணம்

நம்பிக்கைக்கும், வாழ்வுக்கும் இடையே முரண்பாடுகள் இல்லாமல், நம்பகத்தன்மையோடு முதியோர் வாழும்போது, அவர்களது எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்ற இளையோர் விரும்புகின்றனர் என்று, மடகாஸ்கர் கர்தினால் Tsarahazana அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மடகாஸ்கருக்கு வரவேண்டுமென்று விடுக்கப்பட்டுள்ள அழைப்பை அவர் ஏற்றுள்ளார் என்று கர்தினால் Tsarahazana அவர்கள் செய்தியாளர்களிடம் கூறிய வேளையில், அந்தப் பயணம், 2019ம் ஆண்டில் நிகழும்வண்ணம், திருப்பீடம், திட்டங்களை வகுத்து வருகிறது என்று, திருப்பீட செய்தித் துறையின் தலைவர், புர்க்கே அவர்கள், கூறினார்.

நம்பிக்கை தரும் பரிமாற்றங்கள்

மாமன்ற அமர்வுகளில், குறிப்பாக, குழுப் பகிர்வுகளில் திறந்த மனதுடன் மேற்கொள்ளப்படும் கருத்துப் பரிமாற்றங்களும், அவ்வப்போது இளையோரிடமிருந்து இயல்பாக வெடித்தெழும் மகிழ்வும், நம்பிக்கை தருகின்றன என்று கூறிய கானடா கர்தினால் Lacroix அவர்கள், இந்த மாமன்றத்தின் இறுதியில், முழு திருஅவையும் வெற்றியுடன் வெளிவரும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.

மாமன்றம் என்ற படகு தன் பயணத்தை நல்ல முறையில் துவக்கியுள்ளது என்றும், இளையோர், முதியோர், துறவறத்தார், இல்லறத்தார், தலைவர்கள், பொதுநிலையினர் என்று, அனைவரும் இணைந்து மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்தில், தெளிவான வழிகளைக் கண்டடைவோம் என்று, அருள் சகோதரி Becquart அவர்கள் எடுத்துரைத்தார்.

இளையோரின் மொழியைப் பேசும் திருஅவை

இளையோரின் மொழியைப் பேசும் திருஅவை தேவைப்படுகிறது என்று, பல்வேறு மாமன்ற தந்தையர் கூறியுள்ளனர் என்பதைக் குறிப்பிட்ட, திருப்பீட தகவல் தொடர்புத்துறை தலைவர் ருஃபீனி அவர்கள், இந்தத் தேவையை நிறைவு செய்ய, பல்வேறு கர்தினால்கள், இளையோருடன் நேரடியாகப் பேசும் வகையில் காணொளித் தொடர்களை, ஆயர்கள் மாமன்ற செயலகம், உருவாக்கி வருகின்றது என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2018, 16:38