தேடுதல்

ஆயர்கள் உலக மாமன்றம் பற்றிய செய்தியாளர்கள் கூட்டம் - அக்டோபர் 08 ஆயர்கள் உலக மாமன்றம் பற்றிய செய்தியாளர்கள் கூட்டம் - அக்டோபர் 08 

மனிதரின் பலவீனமும் இறை இரக்கமும் சந்திப்பதே புனிதத்தன்மை

செவிமடுப்பதில் ஆர்வம் கொண்டு, காலத்திற்கு ஏற்ற பதிலுரைகளை வழங்கிக் கொண்டிருக்கும் திருஅவை, மன நிறைவைத் தருகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நீதியின்றி எவராலும் வாழமுடியாது என்பதால், சிறார் மீது நிகழும் பாலியல் வன்முறைகள் குறித்த உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டியது அவசியம் என்றார் மால்ட்டா பேராயர் Charles Scicluna.

உலக ஆயர் மாமன்றக் கூட்டத்தில் இத்திங்களன்று இடம்பெற்ற பரிமாற்றங்கள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துரைத்த பேராயர் Scicluna அவர்கள், நீதி, காலம் தாழ்த்தப்படக் கூடாது என்பதையும், நீதியையும், உண்மையையும், மதிக்காத கருணை என்பது, வெறுமையானது என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் உணர்ந்தே செயல்பட்டு வருகின்றார் என்றார்.

அருள்பணியாளர்களின் பணி சேவைக்கானதாக இருக்கவேண்டுமேயொழிய, அதிகார மீறல்களுக்காக இருக்கக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டிய பேராயர் Scicluna அவர்கள், இன்றைய உலகில் இறைவனில் நம்பிக்கை கொண்டு பணியாற்றும் புனித அருள்பணியாளர்கள் குறித்து எடுத்துரைத்து, புனிதத்தன்மை என்பது, மனிதரின் பலவீனமும் இறைவனின் இரக்கமும் சந்திக்குமிடமாகும் என்றார்.

இதே பத்திரிகையாளர் கூட்டத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட பிரான்சின் லியோன் துணை ஆயர் Emmanuel Gobilliard அவர்கள், திங்கள்கிழமை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட ஏனைய தலைப்புக்களான, தலைமுறைகளுக்கு இடையே ஒருமைப்பாடு, திருஅவையில் பெண்களின் பங்களிப்பு, குடியேற்றமும் பாலுறவு நடவடிக்கைகளும் குறித்த கேள்விகள், புனிதத்துவம், ஆகியவை பற்றி எடுத்துரைத்தார்.

இதே சந்திப்பில் கலந்துகொண்ட இத்தாலிய எழுத்தாளரான தாமஸ் லெயோன்சினி அவர்கள், செவிமடுப்பதில் ஆர்வம் கொண்டிருக்கும், மற்றும், காலத்திற்கு இயைந்த பதிலுரைகளை வழங்கும் திருஅவை, மன நிறைவைத் தரும் ஒன்றாக இருப்பதாகக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2018, 17:03