ஆயர் மாமன்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஆயர் மாமன்ற பத்திரிகையாளர் சந்திப்பு 

இளையோரின் கனவுகளையும் கேள்விகளையும் புரிந்துகொள்ள...

மறைமாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் இளையோர் பணிக்குழு, தனித்து இயங்காமல், குடும்பப் பணிக்குழுவுடன் இணைந்து செல்வது முக்கியம் - மாமன்ற தந்தையர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானில் நடைபெற்றுவரும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு பகுதியாக, அக்டோபர் 19ம் தேதி நிகழ்ந்த குழு பகிர்வுகளின் 14 அறிக்கைகள், அக்டோபர் 20, இச்சனிக்கிழமை காலை பொது அமர்வில் வாசிக்கப்பட்டு, விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இளையோர் காணும் கனவுகளையும், அவர்கள் எழுப்பும் கேள்விகளையும் திருஅவை எவ்வளவு தூரம் புரிந்து ஏற்றுக்கொள்கிறது என்பது, குழுப் பகிர்வுகளில் வெளிவந்த ஒரு முக்கிய கருத்தாக அமைந்தது என்று, இச்சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறப்பட்டது.

ஓரங்கட்டப்படுதல், குறிப்பாக, ஆணாதிக்கம் மேலோங்கியிருக்கும் சமுதாயத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படுதல், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாதல், வேலையில்லா நிலை உருவாக்கும் மனத்தளர்ச்சி ஆகிய இளையோரின் பிரச்சனைகளில், திருஅவை, இளையோருடன் எவ்விதம் உறுதுணையாக இருக்கமுடியும் என்ற எண்ணங்கள் குழுப் பகிர்வுகளில் வெளியாயின.

இளையோர் அனைவரும் குடும்பங்களின் அங்கம் என்பதை வலியுறுத்திய மாமன்ற தந்தையர், மறைமாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் இளையோர் பணிக்குழு, தனித்து இயங்காமல், குடும்பப் பணிக்குழுவுடன் இணைந்து செல்வது முக்கியம் என்று பரிந்துரைத்தனர்.

புதிய வழி நற்செய்தி அறிவிப்பு குறித்து சிந்திக்கும்போது, டிஜிட்டல் உலகம் இளையோர் மீது கொண்டிருக்கும் தாக்கத்தை நன்கு புரிந்துகொள்ளவும், டிஜிட்டல் உலகின் நேர்மறை தாக்கங்களை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், அவ்வுலகின் எதிர்மறை தாக்கங்களை இளையோர் எதிர்கொள்வதற்கு வழிகளையும் உருவாக்கித் தருவது திருஅவையின் பணிகளில் முக்கியமானது என்ற கருத்து, இச்சனிக்கிழமை நடைபெற்ற 17வது பொது அமர்வில் முன்வைக்கப்பட்டது.

சமுதாய நீதியை நிலைநாட்டுவதில் இளையோரின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் வளரவேண்டும் என்று கூறிய மாமன்றத் தந்தையர், மனித உரிமை, புலம்பெயர்ந்தோர் பிரச்சனை போன்ற விடயங்களில், கத்தோலிக்க இளையோர், பிற கிறிஸ்தவ சபைகள், மற்றும் பிற மதங்களைச் சார்ந்த இளையோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தினர்.

இவை அனைத்திற்கும் மேலாக, இளையோர், புனிதத்தில் வளர்வதற்கு, திருஅவை, தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்பதை எடுத்துரைத்த மாமன்றப் பிரதிநிதிகள், திருப்பலி, ஏனைய செபக்கூட்டங்கள், மற்றும், வழிபாட்டு நிகழ்வுகளில், இளையோர் ஆர்வம் கொள்ளும் வகையில், தேவையான மாற்றங்கள் நிகழவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2018, 15:39