தேடுதல்

Vatican News
"நமது பெருங்கடல், நமது பாரம்பரியச் சொத்து"  பன்னாட்டுக் கருத்தரங்கில், பேராயர் பியெரோ பியோப்போ "நமது பெருங்கடல், நமது பாரம்பரியச் சொத்து" பன்னாட்டுக் கருத்தரங்கில், பேராயர் பியெரோ பியோப்போ 

"நமது பெருங்கடல், நமது பாரம்பரியச் சொத்து"

கடல்களைப் பற்றிய அறிவு, கடல்களை மதித்தல் ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு வழங்குவது, இன்றைய தலைமுறையினருக்கு முன் உள்ள ஒரு முக்கிய கடமை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித இனத்திற்கு வழங்கப்பட்டுள்ள பெரும் கொடையான கடல்களைப் பாதுகாக்கும் முயற்சிகள், ஒவ்வொரு ஊரிலும், நாட்டிலும், பன்னாட்டளவிலும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் கூறினார்.

இந்தோனேசியாவின் பாலி தீவில், அக்டோபர் 29, 30 ஆகிய இரு நாள்கள், "நமது பெருங்கடல், நமது பாரம்பரியச் சொத்து" என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற, பேராயர் பியெரோ பியோப்போ (Piero Pioppo) அவர்கள், இவ்வாறு கூறினார்.

இந்தோனேசியாவில், திருப்பீடத்தின் தூதராகப் பணியாற்றும், பேராயர் பியோப்போ அவர்கள், கடலால் சூழப்பட்டுள்ள இந்தோனேசியாவில் வாழும் மக்கள், கடலின் அருமையை நன்கு உணர்ந்தவர்கள் என்பதால், இத்தகைய பன்னாட்டு கருத்தரங்கின் பொருளையும் அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்று தன் உரையில் குறிப்பிட்டார்.

கடலும், கடல் சார்ந்த பணிகளும் மனித குலத்திற்கு முக்கியம் என்பதை உணர்ந்துள்ள திருப்பீடம், அப்பணிகளில் பெருமளவு ஈடுபட்டுள்ளது என்பதையும், பேராயர் பியோப்போ அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

உயர்ந்துவரும் கடல்மட்டம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஆகியவை, உலகெங்கும் மக்கள் குடிபெயரும் நிகழ்வுக்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என்பதையும், பேராயர் பியோப்போ அவர்கள் எடுத்துரைத்தார்.

கடல்களைப் பற்றிய அறிவு, கடல்களை மதித்தல் ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு வழங்குவது, இன்றைய தலைமுறையினருக்கு முன் உள்ள ஒரு முக்கிய கடமை என்பதை, பேராயர் பியோப்போ அவர்கள், தன் உரையின் இறுதியில், ஒரு விண்ணப்பமாக விடுத்தார்.

31 October 2018, 14:56