தேடுதல்

Vatican News
பேராயர் பெர்னார்தித்தோ அவுசா பேராயர் பெர்னார்தித்தோ அவுசா  

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது, குடும்பங்களின் கடமை

ஒவ்வொரு குழந்தையும், உடலிலும், உள்ளத்திலும் மென்மையானது என்பதால், அதன் தேவைகளை, குறிப்பாக, அக்குழந்தைக்குத் தேவையான கல்வியை வழங்குவது குடும்பங்களில் துவங்குகிறது - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குழந்தைகளின் உரிமைகளைப் பற்றி பேசும்போது, குடும்பங்களின் முக்கியத்துவம் பற்றி ஐ.நா. அவையில் கருத்துக்கள் முன்வைக்கப்படுவது, திருப்பீடத்திற்கு மிகுந்த நிறைவைத் தருகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், "குழந்தைகளின் உரிமைகள்: பாதுகாப்பும், வளர்ப்பும்" என்ற தலைப்பில், அக்டோபர் 11, இவ்வியாழன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் பிறக்கும்போது, அவ்வுயிரை வரவேற்று பாதுகாப்பு அளிப்பது பெற்றோரின் முதலான கடமை என்பதை வலியுறுத்திக் கூறிய பேராயர் அவுசா அவர்கள், குடும்பங்களில் கிடைக்கும் பாதுகாப்பே, வாழ்நாளெல்லாம், அக்குழந்தைக்கு உறுதி அளிக்கிறது என்று கூறினார்.

ஒவ்வொரு குழந்தையும், உடலிலும், உள்ளத்திலும் மென்மையானது என்பதால், அதன் தேவைகளை, குறிப்பாக, அக்குழந்தைக்குத் தேவையான கல்வியை வழங்குவது குடும்பங்களில் துவங்குகிறது என்று பேராயர் அவுசா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இன்றைய உலகில், புலம்பெயர்தல் என்ற மாபெரும் பிரச்சனையில், குழந்தைகள் மிக கடினமான பாதிப்புக்களை அடைகின்றனர் என்பதை வருத்தத்துடன் எடுத்துரைத்த பேராயர் அவுசா அவர்கள், இக்குழந்தைகளுக்கு பாதுகாப்பளிப்பது, அனைவரின் கடமை என்று வலியுறுத்திக் கூறினார்.

12 October 2018, 15:51