ஐ.நா. அவை கூட்டம் ஐ.நா. அவை கூட்டம் 

மனித உரிமை ஆர்வலர்களை அடக்கும் அரசுகள்

அமைதி, பாதுகாப்பு, முன்னேற்றம், சட்டங்களின் ஆட்சி என்ற நான்கு தூண்கள் மீது, ஐ.நா.அவை எழுப்பப்பட்டுள்ளது - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உன்னத, உலகளாவிய, உடன்பிறந்த நிலையை அடைவதற்கு, நீதி ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்பதை நிலைநாட்டுவது, ஐ.நா. அவையின் முக்கிய பணிகளில் ஒன்று என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நா. அவையில் வழங்கிய உரையில் கூறியதை, ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீட பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் கூறினார்.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றுவரும் 73வது பொது அமர்வில், "தேசிய மற்றும் பன்னாட்டளவில் சட்டங்களின் ஆட்சி" என்ற தலைப்பில், அக்டோபர் 10, இப்புதனன்று, நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசுகையில், சட்டங்களின் ஆட்சி, மனித உரிமைகள் என்ற அடித்தளத்தின் மீது எழுப்பப்படவேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

அமைதி, பாதுகாப்பு, முன்னேற்றம், சட்டங்களின் ஆட்சி என்ற நான்கு தூண்கள் மீது, ஐ.நா.அவை எழுப்பப்பட்டுள்ளது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், இனம், மொழி, மதம், பாலினம் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, மனித உரிமைகள் மதிக்கப்படுவதே, அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்று கூறினார்.

மனித உரிமைகள் மீறப்படும் வேளைகளில், அவற்றை எதிர்த்துப் போராடும் மனித உரிமை ஆர்வலர்கள், தங்கள் பணியை அச்சமின்றி மேற்கொள்ள விடாமல் அடக்குமுறைகளை கையாளும் அரசுகள் குறித்து, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வருத்தம் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2018, 15:22