தேடுதல்

Vatican News
ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீட பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீட பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா 

வறுமை ஒழிப்பைக் குறித்து திருப்பீடப் பிரதிநிதியின் கருத்துக்கள்

வறுமையிலிருந்து மக்களை மீட்கும் முயற்சிகளில், தனி மனிதர்களின் மாண்பு காக்கப்படவேண்டும்; தங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் சக்தியை அம்மக்கள் மீண்டும் பெறவேண்டும் - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதர்களை தனிப்பட்ட முறையிலும், ஒரு சமுதாயமாகவும் வதைத்துவரும் வறுமை என்ற கொடுமை, இன்றைய உலகில் நாம் சந்திக்கும் மிகப்பெரும் சவால் என்று, திருப்பீடப் பிரதிநிதியாக ஐ.நா. அவை கூட்டங்களில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் கூறினார்.

அக்டோபர் 17, இப்புதனன்று, வறுமை ஒழிப்பு உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், ஐ.நா. தலைமைச் செயலர் வெளியிட்ட புள்ளிவிவரங்களை தன் உரையில் நினைவுறுத்தினார்.

வறுமை ஒழிப்பு திட்டங்களால் உலகெங்கும் 100 கோடிக்கும் அதிகமானோர் உதவிகள் அடைந்தாலும், வறுமையின் கோரப்பிடியில் இன்னும் பல நாடுகள், குறிப்பாக ஆப்ரிக்க நாடுகள் சிக்கியுள்ளன என்பதை எடுத்துரைத்த பேராயர் அவுசா அவர்கள், உலகின் வறுமைக்கு இன்று முக்கிய காரணமாக அமைவது, உள்நாட்டுப் போர்களும், இயற்கைப் பேரிடர்களும் என்று கூறினார்.

84 கோடிக்கும் அதிகமானோர் அடிப்படை நீர் வசதிகள் இன்றியும், 100 கோடிக்கும் அதிகமானோர் மின் சக்தி இன்றியும் வாழ்கின்றனர் என்றும், 104 நாடுகளில், வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களில், பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்றும், பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

வறுமையிலிருந்து மக்களை மீட்கும் முயற்சிகளில், தனி மனிதர்களின் மாண்பு காக்கப்படவேண்டும் என்றும், அம்மக்கள் தங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் சக்தியை மீண்டும் பெறவேண்டும் என்றும் பேராயர் அவுசா அவர்கள் வறுமை ஒழிப்பு உலக நாளன்று ஐ.நா.அவையில் வழங்கிய உரையில் வலியுறுத்தினார்.

18 October 2018, 12:50