தேடுதல்

Vatican News
குடியேற்றதாரர்களுடன் கர்தினால் தாக்லே குடியேற்றதாரர்களுடன் கர்தினால் தாக்லே 

அகதிகளுடன் ஒன்றிணைந்து நடக்க ஒரு வாய்ப்பு

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் புலம்பெயர்ந்தோருடன் இணைந்து பயணித்து, அச்சத்திற்கும், பகையுணர்வுக்கும் எதிராக, உறுதிப்பாட்டை வெளிப்படுத்த அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோருடன் இணைந்து பயணத்தைப் பகிர்வோம் என்ற தலைப்பில், கடந்த ஆண்டு, திருத்தந்தையால் துவக்கப்பட்ட கொள்கைபரப்பு முயற்சியின் ஒருபகுதியாக, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், உரோம் நகரில், அக்டோபர் 21, இஞ்ஞாயிறன்று, புலம்பெயர்ந்தோருடன் நடைபயணம் ஒன்றை மேற்கொள்கிறார்.

புலம்பெயர்ந்தோருடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கி வைத்த 'பயணத்தைப் பகிர்வோம்' என்ற நிகழ்ச்சி, உலகின் பல்வேறு நாடுகளில், ‘பத்து இலட்சம் கிலோமீட்டர் உலகத் திருப்பயணம்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதையொட்டி, அனைத்துலக காரித்தாசின் தலைவர், கர்தினால் தாக்லே அவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோருடன் உரோம் நகரின் Trastevere பகுதியிலுள்ள ஒளியின் அன்னை மரியா கோவிலிலிருந்து, வத்திக்கான் புனித பேதுரு பேராலயம் வரை நடைபயணம் மேற்கொள்கிறார்.

காரித்தாஸ் அமைப்பின் 160க்கும் மேற்பட்ட அலுவகங்கள், ஏற்கனவே, சிலே, நியூசிலாந்து, கானடா, பிரித்தானியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோருடன் இணைந்து, பயணங்களைத் துவக்கியுள்ளன.

புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோருடன் ஒன்றணைந்து நடப்பதன் வழியாக வெறுப்புணர்வுகளையும் அச்சங்களையும் வெற்றிகொள்வோம் என ஏற்கனவே கர்தினால் தாக்லே அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

20 October 2018, 15:27