தீபாவளி விழாவைக் கொண்டாட விளக்கேற்றும் சிறுமி தீபாவளி விழாவைக் கொண்டாட விளக்கேற்றும் சிறுமி 

பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தீபாவளி வாழ்த்துக்கள்

வலுவிழந்தோரின் எண்ணிக்கை பெருகி வரும் இன்றையச் சூழலில், கிறிஸ்தவர்களும், இந்துக்களும் இணைந்து ஆற்றும் நற்பணி முயற்சிகள் தீவிரமடைய வேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தீபாவளித் திருநாள் கொண்டாடப்படும் வேளையில், நட்பும், உடன்பிறந்த உணர்வும் இக்கொண்டாட்டத்தில் நிறையவேண்டும் என்றும், இவ்விழாவைக் கொண்டாடும் அனைத்து குடும்பங்களிலும் அமைதியும், மகிழ்வும் பெருகவேண்டும் என்றும், திருப்பீடம் தன் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளது.

வரும் வாரம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளித் திருநாளையொட்டி, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் சார்பில், இவ்வவையின் செயலர், ஆயர், Miguel Ángel Ayuso Guixot அவர்கள், அக்டோபர் 31, இப்புதனன்று செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

"கிறிஸ்தவர்களும், இந்துக்களும்: காயப்படக்கூடிய சமுதாயத்தைப் பாதுகாக்க" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இச்செய்தியில், வறியோர், வியாதியுற்றோர், வயதில் முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், புலம் பெயர்ந்தோர் என்று, இன்றைய உலகில் காயப்படக்கூடிய மக்களின் எண்ணிக்கை கூடி வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

வலுவிழந்த இம்மக்களுக்கென கிறிஸ்தவர்களும், இந்துக்களும் பல்வேறு நற்பணிகளை ஆற்றிவருகின்றனர் என்பதில் ஐயம் ஏதுமில்லை என்றாலும், வலுவிழந்தோர், எண்ணிக்கையில் பெருகி வரும் இன்றையச் சூழலில், நமது நற்பணி முயற்சிகளும் தீவிரமடைய வேண்டும் என்று, இச்செய்தியில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

வறியோரின் இரண்டாவது உலக நாள், நவம்பர் 18ம் தேதி சிறப்பிக்கப்படவிருப்பதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், காயமடையக்கூடிய இச்சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், தங்களை வரவேற்க இதயங்களை திறக்கும் மக்களைக் காணும்போது, நிம்மதியும், மகிழ்வும் அடைகின்றனர் என்று கூறியுள்ள சொற்கள், இச்செய்தியில் இடம்பெற்றுள்ளன.

சமுதாயத்தில் யாரும் வெறுத்து, ஒதுக்கப்படக் கூடாது என்று சிந்திக்கும் வேளையில், நம் குடும்பங்களிலும், உறவுகளிலும் யாரும் இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளனரா என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்று இச்செய்தி அழைப்பு விடுக்கிறது.

அவரவர் தங்கள் சமயங்கள் காட்டும் ஆன்மீக பாரம்பரியங்களில் ஊன்றி நின்று, நல்மனம் கொண்ட அனைத்து மக்களோடும் இணைந்து, நாம் வாழும் இன்றைய உலகையும், வருங்காலத்தையும் மகிழ்விலும், நம்பிக்கையிலும் நிறைப்போம் என்ற விண்ணப்பத்துடன், ஆயர் Ayuso Guixot அவர்கள், தீபாவளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2018, 15:14