ஆயர்கள் பேராயத் தலைவர், கர்தினால் Marc Ouellet ஆயர்கள் பேராயத் தலைவர், கர்தினால் Marc Ouellet  

கர்தினால் மெக்காரிக் குறித்த பிரச்சனைகளுக்கு விளக்கம்

முன்னாள் கர்தினால் மெக்காரிக் அவர்கள், திருஅவையில் படிப்படியாக பதவிகளில் உயர்ந்து வந்துள்ளதற்கு, திருத்தந்தையர்கள் 16ம் பெனடிக்ட் அவர்களும், பிரான்சிஸ் அவர்களும் எவ்வகையிலும் காரணம் அல்ல - கர்தினால் Ouellet

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் கர்தினால் தியோடோர் மெக்காரிக் (Theodore McCarrick) அவர்கள் குறித்த பிரச்சனையில், உண்மை விளக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றை, ஆயர்கள் பேராயத் தலைவர், கர்தினால் Marc Ouellet அவர்கள் வெளியிட்டுள்ளார்.

சிறாருடன் பாலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் கர்தினால் மெக்காரிக் அவர்கள் மீது, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், சில தடைகளை விதித்திருந்தார் என்றும், அவற்றை, தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நீக்கிவிட்டார் என்றும், பேராயர் கார்லோ மரிய விகனோ அவர்கள் குற்றம் சாட்டியிருப்பது தவறு என்று, கர்தினால் Ouellet அவர்களின் அறிக்கை கூறுகிறது.

கர்தினால் மெக்காரிக் மீது விதிக்கப்பட்ட தடைகள் குறித்து, எழுத்துப்பூர்வமாக எவ்வித வழிகாட்டுதல்களும் வழங்கப்படவில்லை என்றாலும், இத்தகையக் குற்றச்சாட்டுக்கள், கர்தினால் மெக்காரிக் மீது சுமத்தப்பட்டுள்ள பட்சத்தில், அவர் மீது கவனம்  செலுத்தும்படி பேராயர் விகனோ அவர்களுக்கு தான் வாய்மொழியாக அறிவுரை கூறியதாக, கர்தினால் Ouellet அவர்கள் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்ற ஓராண்டிலேயே முன்னாள் கர்தினால் மெக்காரிக் அவர்கள் பணிஓய்வு பெற்றார் என்பதை தன் அறிக்கையில் தெளிவுபடுத்திய கர்தினால் Ouellet அவர்கள், முன்னாள் கர்தினால் மெக்காரிக் அவர்கள், திருஅவையில் படிப்படியாக பதவிகளில் உயர்ந்து வந்துள்ளதற்கு, திருத்தந்தையர்கள் 16ம் பெனடிக்ட் அவர்களும், பிரான்சிஸ் அவர்களும் எவ்வகையிலும் காரணம் அல்ல என்பதையும், கர்தினால் Ouellet அவர்கள் கூறியுள்ளார்.

முன்னாள் கர்தினால் மெக்காரிக் அவர்களின் விவகாரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமைதி காத்தார் என்ற குற்றச்சாட்டு, உண்மைக்குப் புறம்பானது என்று கூறும் கர்தினால் Ouellet அவர்கள், முன்னாள் கர்தினால் மெக்காரிக் அவர்கள் குறித்த உண்மைகள் நிரூபணமான உடனேயே, அவரது கர்தினால் பதவியை நீக்கியவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும், அவர் மீது குற்றம் சுமத்துவது, ஓர் அரசியல் சூழ்ச்சியாகத் தெரிகிறது என்றும் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2018, 16:37