தேடுதல்

கம்போடியா நாட்டில் மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் கம்போடியா நாட்டில் மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் 

மீன்பிடி நிறுவனங்கள் இலாபத்தை மட்டும் நோக்குதல் தவறு

இலாப நோக்கு என்பது மனித மாண்பையும் மக்கள் சேவையையும் தாண்டியது அல்ல.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இன்றைய உலகில் 5 கோடியே 96 இலட்சம் பேர் மீன்பிடித் தொழிலுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்றும், இதில் 14 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் எடுத்துரைத்தார் பேரருள்திரு ஃபெர்னாண்டோ கீக்கா.

'மீன்பிடித்துறையில், நிறுவனங்களின் சமூகக்கடமை' என்ற தலைப்பில் இச்செவ்வாய் முதல் வியாழன் முடிய, இஸ்பெயின் நாட்டின் விகோ எனுமிடத்தில் இடம்பெறும் மூன்று நாள் கருத்தரங்கில் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேரருள்திரு. கீக்கா அவர்கள், இன்று உலகில் பிடிக்கப்படும் மீன்களுள் 35 முதல் 38 விழுக்காடு, அனைத்துலக சந்தையில் நுழைவதாகவும், இந்த மீன்களுள் 50 விழுக்காடு, வளரும் நாடுகளில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மீன்பிடித் துறை, பலருக்கு வேலைவாய்ப்பை வழங்குவது உண்மையெனினும், இத்துறையிலும் மனித உரிமை மீறல்களும், குறைந்த வருமானமும், மக்கள் கடத்தப்படலும் இடம்பெறுவது கவலை தருவதாக உள்ளது என்று கூறிய பேரருள்திரு கீக்கா அவர்கள், மீன்பிடி நிறுவனங்களுக்கான சரியான சட்டங்கள் இயற்றப்படுதல், மற்றும், இலாப நோக்கோடு அல்லாமல், நன்னெறி மதிப்பீடுகளோடு அவர்கள் செயல்பட வலியுறுத்தப்படல் போன்றவற்றையும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2018, 17:10